இரண்டு காவல் துறை அதிகாரிகள் குண்டர் கும்பல் உறுப்பினர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் ஒரு அதிகாரிகருக்குத் தலையில் பலத்த அடி ஏற்பட்டது. மற்றொரு அதிகாரிக்கு மூக்கு எலும்பு முறிந்தது.
சிங்கப்பூர்க் காவல் துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட ஆக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்பட்டது.
அதிகாரிகளைத் தாக்கிய இரட்டையர்களான 28 வயது முகமது ஃபார்ஹான், முகமது ஃபிக்ரி ஆகியோர் குண்டர் கும்பல் உறுப்பினர்களாக இருந்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை ஒப்புகொண்டனர்.
சென்றாண்டு ஜூன் மாதம் முகமது ஃபார்ஹானுக்கு 33 மாதச் சிறை தண்டனை, மூன்று பிரம்படிகள், $3,500 அபராதம் விதிக்கப்பட்டது. அரசாங்க ஊழியரைத் தாக்கியது, பொது சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தியது, குண்டர் கும்பலில் உறுப்பினராகச் சேர்ந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளாகச் சட்டவிரோத கும்பல்களுக்கு எதிராக அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
2020ஆம் ஆண்டு நடந்த சில வன்செயல் சம்பவங்களைத் தொடர்ந்து, அதன் தொடர்பாக குண்டர் கும்பல் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்ட 151 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 16 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சென்றாண்டு ஜனவரி நிலவரப்படி குற்றவியல் சட்டம் (தற்காலிக நிபந்தனைகள்) சட்டத்தின் கீழ் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட 95 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் சட்டவிரோத குழுக்களில் உறுப்பினர்களாக இருந்ததற்குக் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2012, 2013ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1,000. 2018, 2019ஆம் ஆண்டுகளில் எண்ணிக்கை 700க்குக் குறைந்தது.


