தனது 80 வயது தாய் மறதிநோய்க்கு ஆளான பிறகு அவரைக் கவனித்துக்கொள்ள திருவாட்டி பதுருனிசா பேகம் ஷேக் தாவூத் சிரமப்பட்டார். அவரின் தாய் வேளாவேளைக்கு மருத்து உட்கொள்ள மறுத்து வந்தார். திருவாட்டி தாவுத் தனக்கு உணவு வழங்குவதில்லை என்று தவறாகவும் குறைகூறி இருக்கிறார்.
இப்படிப்பட்ட சிக்கல்களை எதிர்நோக்கும் திருவாட்டி தாவுத் போன்ற பராமரிப்பாளர்களுக்கு உதவ புதிய ஆதரவுத் திட்டம் அடுத்த மாதம் அறிமுகமாகஉள்ளது. மனநலப் பிரச்சினைகள் இருப்போரின் பராமரிப்பாளர்கள் ஒருவரையொருவர் தொடர்புகொண்டு தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வகைசெய்வது திட்டத்தின் நோக்கம்.
நேற்று அறிவிக்கப்பட்ட இத்திட்டம் ஓராண்டுக்கு நடப்பில் இருக்கும். சிங்கப்பூரில் மாதர் மேம்பாட்டுக்கான வெள்ளை அறிக்கை சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது, அதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட முதல் பராமரிப்பாளர் ஆதரவுத் திட்டம்.
மக்கள் கழகத்தின் மாதர் ஒருங்கிணைப்புக் கட்டமைப்பு மன்றம் மற்றும் 'டபிள்யூஇசி' எனப்படும் பெண்கள் செயற்குழுக்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தில் சேர்க்க ஆறு வட்டாரங்களில் பராமரிப்பாளர்களை அடையாளம் காண்பர். திட்டத்தின் ஒவ்வோர் ஆதரவுக் கட்டமைப்பிலும் குறைந்தது 15 பராமரிப்பாளர்களும் 10 'டபிள்யூஇசி' தொண்டூழியர்களும் இடம்பெறுவர்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், இத்திட்டத்தை உருவாக்கிய அமைப்பின் ஆலோசகராவார்.

