சென்ற வாரம் பூன் லே டிரைவில் ஆயுதம் ஏந்திய இரண்டு ஆடவர்கள் இருவரைத் தாக்கினர். அச் சம்பவம் காணொளியில் பதிவானது. தாக்கப்பட்ட இருவருக்குப் பல வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.
சந்தேக நபர்களான இரு ஆடவர்கள் மீது ஆயுதங்களைக் கொண்டு வேண்டுமென்றே மோசமான காயங்களை விளைவித்ததாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்களில் ஒருவருக்கு 19 வயது, மற்றொருவருக்கு 20 வயது. இது, குண்டர் கும்பல்கள் சம்பந்தப்பட்ட செயல் என்பது உறுதியாகவில்லை. இருந்தாலும், கடந்த ஐந்தாண்டுகளாக இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் அதிகரித்திருக்கக்கூடும் என்ற அச்சம் சிலரிடையே நிலவி வருகிறது.
சிங்கப்பூரில் குண்டர் கும்பல் தொடர்பிலான நிலவரம் கட்டுக்குள் இருப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சென்ற ஆண்டு நாடாளுமன்றத்திற்கு எழுத்து வடிவில் பதிலளித்தார். 2016ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 112 குண்டர் கும்பல்கள் சம்பந்தப்பட்ட மோசமான தாக்குதல்களும் சண்டைகளும் மட்டுமே பதிவாகி வருவதாகவும் சென்ற ஆண்டு ஜூலை மாதம் அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.
எனினும், இளையர்கள் குண்டர் கும்பல்களில் சேர்வது கவலை தரும் ஒன்று என்றும் அவர் சொன்னார். அதனால்தான் இளையர்களை குண்டர் கும்பல்களில் சேராமல் தடுக்க அவர்களிடையே விழிப்புணர்வை வளர்க்கப் பல முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் திரு சண்முகம் கூறினார்.

