சிங்கப்பூரில் 'கேடிவி' கேளிக்கை கூடங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. ஆனால், அவற்றில் 'ஹோஸ்டசஸ்' என்றழைக்கப்படும் விருந்தினர்களை உபசரிக்கும் பெண்கள் இயங்குவதற்குத் தடை இன்னமும் நடப்பில் உள்ளது.
எனினும், சட்டவிரோதமாக இயங்கும் 'கேடிவி' கூடங்களில் அத்தகைய பெண்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்று இந்தத் துறையின் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சட்டவிரோதமாக 'கேடிவி' கூடங்களை இயக்குவோர் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை; அதனால் அத்தகையோருக்குத் தளர்த்தப்பட்ட விதிமுறைகள் ஒரு பொருட்டல்ல என்று 'கேடிவி' கூடங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினர்.
சட்டவிரோதமாக 'கேடிவி' கூடங்களை நடத்துவோர் நல்ல வருமானத்தை ஈட்டுவதாகவும் உரிமமின்றி அவற்றை நடத்துவது அவர்கள் விரும்பும் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் தலைதூக்கியது. அப்போதிருந்து 'கேடிவி' கூடங்களை நடத்த அனுமதி இல்லை.
எனினும், அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக இயங்கும் பல 'கேடிவி' கூடங்கள் தொழில்துறைக் கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் ரகசியமாகச் செயல்படத் தொடங்கின. இவ்வாண்டு மட்டும் இதுவரை அத்தகைய எட்டு 'கேடிவி' கூடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
விருந்தினர்களை உபசரிக்கப் பெண்களைப் பணியில் இறக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 20,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றித் தெரியவந்தால் பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கலாம் அல்லது SPF_Licensing_Feedback@spf.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம்.
அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமையிலிருந்து 'கேடிவி' கூடங்களை மீண்டும் திறக்கலாம்.

