வங்கி அதிகாரிகள் போல நடிக்கும் நபர்கள் அழைத்து ஏமாற்றுவேலையில் ஈடுபடும் போக்கைப் பற்றி காவல்துறை எச்சரித்துள்ளது.
காவல்துறை இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11) அந்த ஆலோசனை அறிக்கையை விடுத்தது.
இதில் வங்கி அதிகாரிகள் போல நடிக்கும் நபர்களிடமிருந்து பொதுமக்கள் அழைப்பைப் பெறுகின்றனர்.
அழைப்பைப் பெற்றவரின் வங்கிக் கணக்கு தவறாகப் பயன்படுத்தப் பட்டுவிட்டதாகவும் அவர் கள்ளப் பணத்தை நல்லப் பணமாக மாற்றியதற்காக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஏமாற்றுப் பேர்வழி கூறுவார்.
இத்தகைய அழைப்புகளில் பெரும்பாலும், வெளிநாடுகளில் இருந்து அழைக்கும்போது தோன்றும் +65 எனும் எண்கள் வரும்.
குறி வைக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கின் நுழைவு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் போன்றவற்றை அழைப்பவர் வாங்கிக் கொள்கிறார்.
பின்னர் காவல்துறையின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு என்று கூறிக்கொள்ளும் மற்றொரு ஏமாற்றுப் பேர்வழிக்கு மாற்றப்படுகிறது.
இவர் வாட்ஸ்ஆப்பில் குறி வைக்கப்பட்டவருடன் தொடர்புகொண்டு, போலிசில் புகார் அளிக்கத் *தேவைப்படுவதாகக் கூறி புகைப்படம், அடையாள விவரங்கள் போன்றவற்றைப் பெறுகிறார்.
சில நேரங்களில் சிங்கப்பூர் காவல்துறை தங்களை விசாரிப்பதாகக் கூறும் போலிக் கடிதங்கள் ஏமாற்றப்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
தங்கள் தனிப்பட்ட விவரங்கள் மாற்றப்பட்டுள்ளதையும் தங்கள் அனுமதி இல்லாமல் பணப்பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதையும் கூறும் வங்கிக் கடிதங்கள் கிடைக்கும்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை அவர்கள் உணர்கின்றனர்.
தொலைபேசி அழைப்பு, சமூக குறுஞ்செய்தி ஊடகங்கள் போன்றவற்றில், அடையாள அட்டை எண், புகைப்படம் போன்ற தனிப்பட்ட விவரங்களை எந்த அரசாங்க அமைப்பும் கேட்காது என்று போலிசார் வலியுறுத்தினர்.

