பிரதமர் லீ சியன் லூங்கும் பனாமா வெளியுறவு அமைச்சர் எரிகா மோயன்சும் இருநாட்டு நல்லுறவை மறுஉறுதி செய்துகொண்டுள்ளனர்.
இரு தலைவர்களும் நேற்று இஸ்தானாவில் சந்தித்துக்கொண்டனர்.
சிங்கப்பூருக்கும் பனாமாவுக்கும் இடையில் அரசதந்திர உறவு தொடங்கி இந்த ஆண்டுடன் நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளநிலையில், ஆழமான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிந்திய பொருளியல் மீட்சி தொடர்பான உள்நாட்டுக் கொள்கைகள், வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துப் பரிமாறிக்கொண்டனர்.
தென்கிழக்காசியாவுடனும் ஆசியான் அமைப்புடனும் அணுக்கமான உறவை மேம்படுத்துவது தொடர்பில் பனாமா காட்டும் ஆர்வத்தைப் பிரதமர் லீ வரவேற்றதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
திருவாட்டி மோயன்ஸ் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங்கையும் சந்தித்துப் பேசினார். ஏப்ரல் 9ஆம் தேதி அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்த அவர் நாளை வரை இங்கு இருப்பார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ உள்ளிட்டோரை, பனாமா வெளியுறவு அமைச்சர் எரிகா மோயன்ஸ் சந்தித்துப் பேசவிருக்கிறார்.