சிங்கப்பூரில் ஜூன் 1ஆம் தேதியில் இருந்து, வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ஆளில்லா வானூர்திகள் (படம்) அனைத்திலும் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தவேண்டியது அவசியம்.
குறிப்பாக, இணையத் தொடர்பு மூலம் இருப்பிடம் குறித்த தகவல்களைப் பகிரும் வசதி இல்லாத வானூர்திகளுக்கு இது கட்டாயம். விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பை அதிகரிப்பது இதன் நோக்கம்.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் புதிய விதியின்கீழ், 250 கிராமுக்கு அதிகமான எடைகொண்ட ஆளில்லா வானூர்திகளுக்கு இது பொருந்தும்.
உரிமம் பெற்று ஆளில்லா வானூர்திகளை இயக்கும் அனைவரையும் நிர்வகிக்கவும் சிங்கப்பூர் ஆகாயப் பரப்பில் ஆளில்லா வானூர்திகளை அணுக்கமாகக் கண்காணிக்கவும் இந்த நடைமுறை உதவும்.
இதற்கான செயலியை ஆளில்லா வானூர்தியை இயக்குவோர் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஜூன் 1ஆம் தேதியில் இருந்து அதில் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அவர்கள் செயல்பட வேண்டும்.
விதிமுறைகளை மீறியது நிரூபிக்கப்பட்டால் பத்தாயிரம் வெள்ளி வரையிலான அபராதமோ ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
மார்ச் 15ஆம் தேதி நிலவரப்படி, 237 தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் ஆளில்லா வானூர்திகளை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

