வடமேற்கு வட்டாரத்தில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்குக் குழந்தை அணையாடை உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை அணையாடை வாங்க ஏற்படும் பெரும்பாலான செலவை ஈடுகட்ட 'ஹக்கிஸ் சிங்கப்பூர் டயப்பர் பேங்க்@ நார்த் வெஸ்ட்' எனும் திட்டம் கைகொடுக்கும் என்று வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் நேற்று தெரிவித்தது.
தகுதி பெறும் குடும்பங்கள் குழந்தை அணையாடைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஓர் ஆண்டில் மொத்தம் 12 குழந்தை அணையாடை பொட்டலங்கள் வழங்கப்படும். ஒவ்வோர் ஆண்டிலும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்கள் என இருமுறை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை குழந்தை அணையாடைகளைப் பெற தகுதி பெறும் குடும்பங்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அடுத்த 14 வேலை நாட்களுக்குள் குழந்தை அணையாடைகளை அவர்கள் பெறுவர்.
கிம்பர்லி-கிளார்க் சிங்கப்பூருடன் இணைந்து நடத்தப்படும் இத்திட்டம் மூலம் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 1,000 குழந்தைகள் பலனடைவர். இந்தத் திட்டத்துக்குத் தகுதி பெற வடமேற்கு வட்டாரக் குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும். அத்துடன் குழந்தை அணையாடை அணியும் நான்கு வயது அல்லது அதற்கும் குறைந்த வயதுடைய குழந்தைகளைக் கொண்ட குடும்பமாக இருக்க வேண்டும். தனிநபர் வருமானம் $750 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
அல்லது குடும்பத்தின் மொத்த வருமானம் $1,900 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். குடும்பத்தில் குறைந்தது ஒருவராவது சிங்கப்பூரராக இருக்க வேண்டும். குழந்தை எண்ணிக்கையில் வரம்பு ஏதும் இல்லை.
"2021ஆம் ஆண்டில் வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு நாங்கள் குழந்தை அணையாடைகளை விநியோகம் செய்தோம். அப்போது அதை ஒரு தற்காலிகப் பிரச்சினை என்று நினைத்தோம். ஆனால் குழந்தை அணையாடை வாங்க முடியாமல் வசதி குறைந்த குடும்பங்கள் சிரம்மபடுவது குறித்து எங்கள் பங்காளிகளிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்ச்சியாக நிலவும் பிரச்சினை என்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். எனவே முழுமையான உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளோம். இதன்மூலம் நீடித்த நிலைத்தன்மையுடன் கூடுதல் குடியிருப்பாளர்களுக்கு எங்களால் உதவ முடியும். அத்தியாவசியப் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றை வசதி குறைந்த குடும்பங்களிடம் கொண்டு போய் சேர்க்க சமூக மேம்பாட்டு மன்றம் கொண்டிருக்கும் இலக்குடன் இத்திட்டம் ஒத்துப்போகிறது," என்று வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாம் தெரிவித்தார்.

