நன்யாங் பலதுறைப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) லீ கோங் சியன் மருத்துவக் கல்லூரி 2029ஆம் ஆண்டிலிருந்து அதன் மருத்துவப் பட்டங்களை வழங்க இருக்கிறது.
அதன்படி 2024ஆம் ஆண்டிலிருந்து அக்கல்லூரியில் சேர்ந்துப் பயிலும் மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு என்டியு மருத்துவக் கல்லூரி சுயமாக வழங்கும்
மருத்துவர் பட்டம் கிடைக்கும்.
தற்போதைய நிலவரப்படி அக்கல்லூரியில் மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப் பட்டங்களில் என்டியு மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பெயர்கள் இடம்பெறுகின்றன.
திட்டமிட்டபடி 2028ஆம் ஆண்டுடன் என்டியுவுக்கும் இம்பீரியல் கல்லூரிக்கும் இடையிலான பங்காளித்துவம் முடிவடைகிறது. இவ்வாண்டிலும் அடுத்த ஆண்டிலும் என்டியு மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இரு கல்லூரிகளின் பெயர்களைக் கொண்ட மருத்துவப் பட்டங்கள் கிடைக்கும்.
சிங்கப்பூரின் வளர்ந்துவரும் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய லீ கோங் சியன் மருத்துவக் கல்லூரி 2010ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் அதன் முதல் மாணவர் பிரிவை அது வரவேற்றது. அவர்கள் 2018ஆம் ஆண்டில் பட்டம் பெற்றனர்.
லீ கோங் சியன் மருத்துவக் கல்லூரியின் பாடத்திட்டம் கிட்டத்தட்ட இம்பீரியல் கல்லூரியின் பாடத்திட்டத்தைப் போன்றது.
சிங்கப்பூரின் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குழு அடிப்படையிலான கற்றல், ஆரம்பநிலையிலேயே மருத்துவச் சேவை வழங்கும் அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்குவது ஆகிய அணுகுமுறைகளை லீ கோங் சியன் மருத்துவக் கல்லூரி கடைப்பிடிக்கிறது.
முதல் சில ஆண்டுகளில் இம்பீரியல் கல்லூரியன் தலைவர் லீ கோங் சியன் மருத்துவக் கல்லூரியின் தலைவராகவும் செயல்பட்டார். லீ கோங் சியான் மருத்துவக் கல்லூரியின் முக்கிய ஊழியர்
களுக்குப் பயிற்சி அளிப்பதில் இம்பீரியல் கல்லூரி பெரும் பங்கு வகித்தது.
2014ஆம் ஆண்டில் லீ கோங் சியன் மருத்துவக் கல்லூரிக்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். அக்கல்லூரியின் துறைசார்ந்த உறுப்பினர்கள் அனைவரும் தற்போது சிங்கப்பூரை மையமாகக் கொண்டவர்கள். அவர்களில் சிலர் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள்.

