செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
1b6546db-5709-4812-8a49-a96072498f02
-

ஊழியர்களை வேலையில் அமர்த்த தளவாட நிறுவனங்கள் திட்டம்

ஊழியர் எண்ணிக்கையை இவ்வாண்டு அதிகரிக்க தளவாட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மின்வர்த்தகம் புதிய வழக்கமாகியுள்ளதாலும் கூடுதல் ஊழியர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

உருமாறிவரும் நிறுவனங்கள் புதிய வேலைகளை உருவாக்குகின்றன. பழைய வேலைகள் மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன.

உள்ளூர் தளவாட நிறுவனமான ஒய்சிஎச் அதன் மின்வர்த்தகப் பிரிவில் பணிபுரிய ஏறத்தாழ 20 பேரை வேலையில் அமர்த்தியுள்ளது.

தளவாடத் துறைக்குத் தேவையான திறன்களைக் கொண்டவர்களை வேலைக்கு எடுத்து வருவதாக ஜே அண்ட் டி எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரு சிம் தெரிவித்தார். மென்பொருள் மேம்பாடு, தரவுப் பகுப்பாய்வு, போன்ற தொழில்நுட்பத் திறன்களில் அனுபவம் கொண்டவர்களை வேலையில் அமர்த்துவதாக அவர் கூறினார்.

மலாய்/முஸ்லிம் குற்றவாளிகளுக்கு ஆதரவளிக்க புதிய கட்டமைப்பு

போதைப்பொருள் குற்றங்களுக்காக தம்முடைய மகனும் மருமகளும் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தம்முடைய 20 வயது பேரப்பிள்ளையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் 76 வயது மூதாட்டி ஒருவர்.

சிறைக் கைதிகள், முன்னாள் குற்றவாளிகள், அவர்தம் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க 2019ல் தொடங்கப்பட்ட 'ஃபித்ரா' என்ற திட்டத்தைச் சேர்ந்த தொண்டூழியர்கள் அந்த மூதாட்டிக்கு உதவ முன்வந்தனர். ஆனால், தொடக்கத்தில் அவர் தயங்கினார்.

மருத்துவப் பரிசோதனைகளுக்கு அவரை அழைத்துச் செல்ல அவருக்குத் தொண்டூழியர்கள் பலமாதங்களாக உதவி வந்தனர். நடமாட்டப் பிரச்சினையும் நாள்பட்ட ஆஸ்துமா நோயாலும் அவதியுறும் அந்த மூதாட்டி, பின்னர் அவர்களிடம் மனந்திறந்து உதவி கேட்டார்.

மலாய்/முஸ்லிம் அமைப்புகள் மறுவாழ்வுக் கட்டமைப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு நேற்று பேசிய உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம், இந்த உதாரணத்தைப் பகிர்ந்துகொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட இந்தக் கட்டமைப்பில் 37 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றும் இந்தக் கட்டமைப்பு, மலாய் குற்றவாளிகள், முன்னாள் குற்றவாளிகள், அவர்களுடைய குடும்பங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.

கதிஜா பள்ளிவாசலைப் புதுப்பிக்க ஆறு சமூக அமைப்புகள் நன்கொடை

சிங்கப்பூரின் பழம்பெரும் பள்ளிவாசல்களில் ஒன்றான கதிஜா பள்ளிவாசலின் புதுப்பிப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க, ஆறு சமூக அமைப்புகள் நேற்று நன்கொடை வழங்கின. தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கான வளம், ஆலோசனை மையம் அந்தப் பள்ளிவாசலில் அமைந்துள்ளது.

சிங்கப்பூர் இஸ்லாமிய கல்விமான் மற்றும் சமய ஆசிரியர் சங்கம், ஏஎம்பி சிங்கப்பூர், ஜாமியா சிங்கப்பூர், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம், சிங்கப்பூர் பங்ளாதேஷ் சங்கம் ஆகியன அந்த ஆறு சமூக அமைப்புகள்.

கதிஜா பள்ளிவாசலில் சமய மறுவாழ்வுக் குழு நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசினார் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன். தீவிரவாத சித்தாந்தத்துக்கு ஆளானோரிடம் இருந்து விடுக்கப்படும் மிரட்டல்களை சிங்கப்பூர் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் வேளையில், சமய மறுவாழ்வுக் குழுவின் திட்டங்கள் இன்னமும் முக்கியம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன என்று திரு டியோ குறிப்பிட்டார்.

கதிஜா பள்ளிவாசல் மற்றும் சமய மறுவாழ்வுக் குழுவின் மறுமேம்பாட்டுப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவது குறித்து தாம் பெருமிதம் கொள்வதாக திரு டியோ சொன்னார்.

"உள்ளூர் சமூகத்திடமிருந்து சமய மறுவாழ்வுக் குழுவிற்கு வலுவான ஆதரவு கிடைப்பது குறித்தும் நான் பெருமிதம் கொள்கிறேன்," என்றும் அவர் கூறினார்.