வழக்கறிஞர் லாரன்ஸ் கோ எங் யாவ் கவனக்குறைவாக காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில், மோட்டார்சைக்கிளோட்டி வோங் இயூ வாய், 33, என்பவர் உயிரிழந்தார். 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஆயர் ராஜா விரைவுச்சாலையில் முதல் தடத்தில் கோ காரை ஓட்டிக்கொண்டு இருந்தார். போக்குவரத்து நெரிசல் காரணமாக அவருக்கு முன்னால் இருந்த கார்கள் நின்றன.
முன்னால் நின்ற காருடன் மோதுவதைத் தவிர்க்க, கோ தமது காரை இடதுபுறம் திருப்பியதில், விரைவுச்சாலையின் இரண்டாம் தடத்தில் சென்றுகொண்டிருந்த திரு வோங் மீது அது மோதியது. மூன்றாம் தடத்திற்குத் தள்ளப்பட்ட திரு வோங் மீது லாரி ஒன்று ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கவனக்குறைவாக காரை ஓட்டி மோட்டார்சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்த குற்றத்தை கோ நேற்று ஒப்புக்கொண்டார்.
தம்முடைய கட்சிக்காரர் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகவும் விபத்து நிகழ்ந்த தருணத்தில் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அவர் காரை வேகமாக ஓட்டவில்லை என்றும் தற்காப்பு வழக்கறிஞர் ரமேஷ் திவாரி நேற்று நீதிமன்றத்தில் கூறினார்.
ஏப்ரல் 29ஆம் தேதி கோவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

