பாலியல் குற்றச்செயல்கள், குடும்ப வன்முறை ஆகியவற்றில் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் ஆதரவு வழங்க, அடுத்த ஆண்டு புதிய காவல்படைப் பிரிவு ஒன்றை அமைக்கவிருப்பதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
பாலியல் குற்றங்களையும் குடும்ப வன்முறைச் சம்பவங்களையும் கையாளும் அனுபவமும், பாதிக்கப்பட்டோரை மேம்பட்ட முறையில் நிர்வகிக்கும் திறனும் கொண்ட காவல்துறை அதிகாரிகள் அதில் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
'பாலியல் குற்றம், குடும்ப வன்முறைக்கு எதிரான காவல்படைப் பிரிவு' அமைக்கப்படுவது குறித்து சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று அறிவித்தார்.
பாலியல் குற்றங்களைக் கையாள்வதில் அரசாங்கம் மிக வலுவான, உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான சட்ட நடைமுறைகள் கடந்த ஆண்டுகளில் வலுவாக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதன் செயல்முறையை மறுஆய்வு செய்து, பாதிக்கப்பட்டோர் என்ன செய்யலாம் என்பது குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.
காவல்துறை 'கேன்டோன்மண்ட்' வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை விழிப்புணர்வுக் கருத்தரங்கில் திரு சண்முகம் உரையாற்றினார்.
இதில் காவல்துறை அதிகாரிகளுடன் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, இதர அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
2017க்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையில் 9,200 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாயின.
பாதிக்கப்பட்டோரில் சிறுவர்களும் அடங்குவர். இவற்றில் 869 சம்பவங்களில், குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
சென்ற ஆண்டு புகாரளிக்கப்பட்ட பாலியல் குற்றச் செயல்களில் 42 விழுக்காட்டுக்கும் அதிகமானவை மானபங்கச் செயல்கள். அதற்கு முந்தைய ஆண்டைவிட இது கிட்டத்தட்ட 12% அதிகம்.
பதினோரு ஆண்டுகளில் இல்லாத வகையில் சென்ற ஆண்டு சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவங்கள் 70% அதிகரித்தன.
பாலியல் குற்றச்செயல்களை மேம்பட்ட முறையில் கையாள அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவதுடன் மரபணு மாதிரிகளைச் சேகரிப்பதன் முக்கியத்துவத்திலும் கவனம் செலுத்தப்படும் என்று திரு சண்முகம் கூறினார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்வுகாண இயலாமல் இருந்த பாலியல் வழக்கில் மரபணு மாதிரி மூலம் காவல்துறை அதிகாரிகள் ஆதாரத்தைக் கண்டறிந்ததை அவர் சுட்டினார்.
பாலியல் குற்றச்செயல்கள், குடும்ப வன்முறைச் சம்பவங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோரைக் கையாள, சமூகப் பங்காளித்துவ நிறுவனங்களுடன் காவல்துறை அணுக்கமாகச் செயல்படும் என்றார் அமைச்சர்.
இம்மாதத் தொடக்கத்தில் 'எஸ்ஜி ஹெர் எம்பவர்மண்ட்' எனும் அறநிறுவனம் தொடங்கப்பட்டது குறித்து அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். மூத்த வழக்கறிஞர் ஸ்டெஃபனி இயுயென் தியோ தலைமையிலான அந்த அறநிறுவனம் இணையத்திலும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது.
பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடும் காவல்துறை

