கொவிட்-19 கிருமிப்பரவலின்போது பள்ளிகள் மூடப்பட்டு, தென்கிழக்காசியாவில் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தபோது 'கூபிட்ஸ்' கற்றல் நிலையம் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியது.
இருப்பினும் அதன் நிறுவனர் ஸ்டேன்லி ஹான் மனம்தளராமல் வர்த்தக நடைமுறையை மாற்றினார். அதுவரை நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தகமுறையைப் பின்பற்றிவந்த அவர், வாடிக்கையாளருடன் நேரடித் தொடர்புகொள்ளும் நடைமுறைக்கு மாறிக்கொண்டார்.
துணிச்சலான முடிவு இது என்றார் திரு ஹான். விளைவு பற்றி எந்த குறிப்பும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய அதிகம் செலவழித்ததாகக் கூறிய அவர், இந்த உருமாற்றம் மிகவும் சவால்மிக்கதாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
கணிதப் பாடத்தை செயற்கை நுண்ணறிவின் துணையுடன் அவரவர்க்கு ஏற்றவகையில் விளையாட்டுகளின்வழி கற்றுத்தருகிறது 'கூபிட்ஸ்'.
பள்ளிகள் மூடப்பட்டிருந்த வேளையில் பெற்றோரின் சிரமத்தைக் குறைக்க அணுகியதில் நல்ல பலன் கிட்டியது. ஒன்பது மாதங்களில் முன்னைய வருவாயைக் காட்டிலும் அதிகமாக வருவாய் ஈட்டத் தொடங்கியது நிறுவனம். ஊழியர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டதால் அவர்களுக்கு கிருமிப்பரவல் நேரத்திலும் சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தது 'கூபிட்ஸ்'.
தற்போது 50க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 200,000க்கும் அதிகமான மாணவர்கள் இதன் மூலம் பலனடைகிறார்கள்.
கெப்பல் பே டவரில் இருக்கும் இதன் அலுவலகத்துக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று நேரில் சென்றிருந்தார். புத்தாக்க முறையில் தொழில்நுட்பத்தின் துணையுடன் வர்த்தக நடைமுறையை மாற்றி கூடுதல் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்த 'கூபிட்ஸ்' நிறுவனத்தின் அணுகுமுறையை அதிபர் பாராட்டினார்.

