24 வயது திரு ஜேசன் டான் சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை தாமதமாகக் கண்விழித்தார்.
அன்றைய தினம் வேலைக்குப் போக வேண்டாம் என அவருடைய கர்ப்பிணி மனைவி கூறியபோதும் விநியோக ஊழியரான திரு டான், ஓட்டுநர்களுக்கான ஊக்குவிப்புத் தொகையை ஈட்ட விரும்பினார்.
அதைப் பெற 13 ஆர்டர்களை மட்டுமே பூர்த்திசெய்ய வேண்டிய நிலையில், கம்பாஸ் அவென்யூ வழியாக அவர் மோட்டார்சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ஒரு வேன், இரண்டு மோட்டார்சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து ஞாயிறு பிற்பகல் ஒரு மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
மற்றொரு மோட்டார்சைக்கிளோட்டியான 20 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கவனக்குறைவாக வேனை ஓட்டி மரணம் விளைவித்ததாக 36 வயது வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

