சிங்கப்பூர் உணவு அமைப்பு, கூடுதலான 'கிண்டர்' சாக்லெட் பொருள்களைத் திரும்பப்பெற உத்தரவிட்டுள்ளது.
அவற்றில் சல்மோனெல்லா கிருமி கலந்திருக்கக்கூடும் என்ற அச்சம் இதற்குக் காரணம்.
காலாவதியாகும் தேதி எதுவாயினும், அனைத்து 'கிண்டர் ஷோகோபோன்ஸ்' பொட்டலங்கள், 100 கிராம் எடையுள்ள 'கிண்டர் சர்ப்ரைஸ் மேக்ஸி' பொட்டலங்கள், 75 கிராம் எடையுள்ள 'கிண்டர் மினி எக்ஸ்' பொட்டலங்கள், 150 கிராம் எடையுள்ள 'கிண்டர் எக் ஹண்ட் கிட்' பொட்டலங்கள் ஆகியவை திரும்பப்பெறப்படுவதாக அமைப்பு நேற்று தகவல் வெளியிட்டது.
பாதிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்டவை.
அயர்லாந்தின் உணவுப் பாதுகாப்பு ஆணையம் இந்த வகை 'கிண்டர்' சாக்லெட் பொருள்களைத் திரும்பப்பெற உத்தரவிட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் உணவு அமைப்பின் தகவல் வெளியானது.
முன்னதாக, ஏப்ரல் 6ஆம் தேதி 'கிண்டர் சர்ப்ரைஸ் எக்' பொட்டலங்களை மட்டும் திரும்பப்பெற உத்தரவிடப்பட்டிருந்தது. ஜூலை 11 முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை காலாவதியாகும் பொருள்கள் மட்டுமே இவ்வாறு திரும்பப் பெறப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 8ஆம் தேதி, 75 கிராம் எடையுள்ள 'கிண்டர் மினி எக்ஸ்' பொட்டலங்கள், 150 கிராம் எடையுள்ள 'கிண்டர் எக் ஹண்ட் கிட்' பொட்டலங்கள், 100 கிராம் எடையுள்ள 'கிண்டர் சர்ப்ரைஸ் மேக்ஸி' பொட்டலங்கள் ஆகியவையும் திரும்பப் பெறப்பட்டன.
இத்தாலியின் ஃபெரெரோ குழுமம், 'கிண்டர்' சாக்லெட்டுகளைத் தயாரிக்கிறது.
சல்மோனெல்லா கிருமி குறித்த அச்சத்தால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வேறு சில நாடுகளிலும் 'கிண்டர்' சாக்லெட் பொருள்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. சல்மோனெல்லா கிருமி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடியது.

