தொடர்ந்து 20வது மாதமாக மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகளின் விலை சென்ற மாதம் அதிகரித்துள்ளது.
மேலும், சென்ற மாதம் பதிவான மறுவிற்பனை கூட்டுரிமை வீட்டுப் பரிவர்த்தனைகளும் கூடின. முன்னதாக தொடர்ந்து ஆறு மாதங்களாக இந்த எண்ணிக்கை குறைந்து வந்தது.
சென்ற மாதம் மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகளின் விலை 0.8 விழுக்காடு கூடியது. இது, கடந்த பிப்ரவரி மாதம் பதிவான விகிதத்தைவிட 0.2 விழுக்காடு அதிகம்.
சென்ற ஆண்டு மார்ச் மாதம் பதிவான விலையைக் காட்டிலும் சென்ற மாதம் மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகளின் விலை 9.7 விழுக்காடு அதிகரித்தது.
கடந்த பிப்ரவரி மாதத்துக்கான புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில் சென்ற மாதம் பதிவான மறுவிற்பனை கூட்டுரிமை வீட்டுப் பரிவர்த்தனைகள் 35.6 விழுக்காடு அதிகரித்தன.
பிப்ரவரி மாதத்தில் 960 வீடுகள் விற்கப்பட்டன. சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை 1,302ஆகப் பதிவானது.
எனினும் சென்ற ஆண்டு மார்ச் மாதம் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது சென்ற மாதம் பதிவான மறுவிற்பனை கூட்டுரிமை வீட்டுப் பரிவர்த்தனைகள் 31.4 விழுக்காடு குறைந்தன.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடப்பில் இருந்த பாதுகாப்பு விதிமுறைகள் தளர்த்தப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் சென்ற மாதம் கூடுதலான மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகள் விற்பனையானதாக சொத்துச் சந்தை கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

