பிறரைப்போல் நடித்து ஏமாற்றி வங்கிக் கடன் அட்டைகள், தொலைபேசி தொடர்புகள், வாடகை வாகனங்கள், வாடகை வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பம் செய்து ஓர் ஆடவர் சுமார் 400,000 வெள்ளி மதிப்புள்ள பொருள்களைப் பெற்றிருக்கிறார்.
குற்றவாளியான 36 வயது ஜேய்டன் ரெய்னுக்கு ஐந்தாண்டுகள் மூன்று மாதச் சிறைத் தண்டனையும் ஈராயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்ட மூவாண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.
ரெய்ன் குறைந்தது மூவாண்டுகளாகக் குற்றங்களைப் புரிந்தார். தனது சக ஊழியர், தாய் உள்ளிட்ட ஏழு பேரைப்போல் நடித்து அவர் ஏமாற்றியிருக்கிறார்.
2019ஆம் ஆண்டு ரெய்னைப் பிடிக்கக் காவல்துறையினர் அவர் தங்கியிருந்த கூட்டுரிமை வீட்டுக்குச் சென்றனர். ரெய்ன் அந்த வீட்டை ஏமாற்றி வாடகைக்கு எடுத்திருந்தார். காவல்துறையினர் தன்னைப் பிடிக்க வந்தபோது அவர் வாகனத்தை வேகமாக ஓட்டித் தப்பிச் சென்றார். அப்போது ஒரு நபரின் கால் மீது வாகனத்தை ஏற்றினார்.
அதற்குப் பிறகு வாகனத்திலிருந்து இறங்கி தப்பியோட முயன்ற ரெய்னைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
முன்னதாக ஜான்சன் ஃபொக் ஜுன் ஹொங் என்றழைக்கப்பட்ட ரெய்ன், தன் மீது சுமத்தப்பட்ட 38 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். பிறரைப்போல் நடித்து ஏமாற்றுவது, போதைப் பொருள் உட்கொண்டது உள்ளிட்டவற்றின் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தீர்ப்பளிக்கும்போது மேலும் 78 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.
குற்றங்களைப் புரிந்தபோது ரெய்ன் 'ஜேசி செஞ்சுரி' என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்தததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. அந்நிறுவனம் முக்கியமாக விளம்பரச் சேவைகளை வழங்கியதும் தெரியவந்தது.
அது சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கும்போது கட்டணங்களைப் பெறுவது போன்ற நடவடிக்கைகளுக்காகப் பிறரின் அடையாள அட்டைகளின் படங்களைப் பெற்று ரெய்ன் ஏமாற்றி குற்றங்களைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

