'மேனுலைஃப்' நிறுவனத்தை ஏமாற்ற முயன்ற பெண்
காப்புறுதித் திட்டங்களை விற்கும் முகவருடன் சேர்ந்து 'மேனுலைஃப்' காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்றி 1,128.57 வெள்ளியைப் பறிக்க முயன்றதை ஒரு பெண் ஒப்புக்கொண்டுள்ளார். குற்றவாளியான 27 வயது சில்வர் ஹுவாங் சின் டியென், நிதிச் சேவை நிர்வாகியாகப் பணிபுரிந்து வந்தார்.
ஏமாற்றியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை நேற்று அவர் ஒப்புக்கொண்டார். 'மேனுலைஃப்' தகுந்த சோதனைகளை மேற்கொண்டதால் ஹுவாங் ஏமாற்றி பறிக்க முயன்ற தொகை அவருக்கு வழங்கப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரியவந்தது.
2020ஆம் ஆண்டு ஹுவாங் இக்குற்றத்தைப் புரிந்தார். அப்போது அவர் 'பையஸ்' எனும் நிறுவனத்திற்கு வேலை செய்தார். பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் காப்புறுதித் திட்டங்களைப் பிறருக்கு விற்பது அவரின் பொறுப்பாக இருந்தது. 'ஏஐஏ சிங்கப்பூர்' காப்புறுதி நிறுவனத்தில் வேலை செய்த பெட்ரிஷியா குவெக் புவே யீயுடன் சேர்ந்து ஹுவாங் குற்றத்தைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. பெட்ரிஷியாவுக்குத் தற்போது 40 வயது. இம்மாதம் 28ஆம் தேதியன்று ஹுவாங்கிற்குத் தீர்ப்பு வழங்கப்படும்.
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மக்கள் ஆதரவைத் தேடிய வழக்கறிஞர்
நடைபெறவிருந்த நீதிமன்ற விசாரணை அமர்வுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்ட வழக்கறிஞர் 15 மாதங்களுக்குத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு இணங்காமல் நடந்துகொண்டு குற்றவாளி அதை அவமதித்தார். அதற்குப் பொதுமக்களிடமிருந்து ஆதரவு தேடிக்கொள்ள அவர் சமூக வலைத்தளங்களில் நீதிமன்ற விசாரணை விவரங்களை வெளியிட்டார்.
'கோர்ட் ஆஃப் த்ரீ ஜட்ஜஸ்' எனும் நீதிமன்றம் குற்றவாளியான திரு ஸீரோ நெல்போனைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்தது. வழக்கறிஞர்களைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ பணிநீக்கம் செய்ய அந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
சட்டவிரோதமாக ஆளில்லா
வானூர்தியைச் செலுத்திய ஆடவர்
சுமார் ஈராண்டுகளுக்கு முன்பு ஆடவர் ஒருவர் சட்டவிரோதமாக ஆளில்லா வானூர்தியைச் செலுத்தியதால் சிங்கப்பூர் ஆகாயப் படையைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் பாதை மாறிப் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது. தெங்கா ஆகாயப் படைத் தளத்தில் அந்த வானூர்தி அடையாளம் காணப்பட்டது.
இச்சம்பவம் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்தது. வானூர்தியுடன் விமானங்கள் மோதும் அபாயம் இருந்ததால் விமானங்கள் பறப்பதற்குப் புறப்படும் பாதையை அரை மணிநேரத்திற்கு மூடவேண்டியிருந்தது.
குற்றவாளியான 43 வயது ஜேசன் இங் யொக் சென் ஆகாயப் போக்குவரத்து சட்டத்தின்கீழ் தன் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். நாளை அவருக்குத் தீர்ப்பு வழங்கப்படும்.
விதிமுறைகளை மீறிய 12 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு அபராதம்
சுற்றுப்புற, பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகே வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் 12 ஓட்டுநர்கள் பிடிபட்டுள்ளனர். தேசிய சுற்றுப்புற அமைப்பு, சிங்கப்பூர் காவல்துறை, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை இணைந்து நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அடிக்கடி சோதனைகள் நடத்தப்படும் என்று மூன்று அமைப்புகளும் குறிப்பிட்டன. எதிர்பாரா வேளைகளிலும் சோதனைகள் இடம்பெறும் என்றும் அவை தெரிவித்தன.
வாகனம் வெளியிடும் நச்சுவாயு உள்ளிட்டவை தொடர்பிலான சிங்கப்பூரின் விதிமுறைகளை வெளிநாடுகளிலிருந்து வரும் ஓட்டுநர்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்பதை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

