பிஓஎஸ்பி வங்கியின் 'ஸ்மார்ட் படி' திட்டம் 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மில்லேனியா கல்வி நிலையம் ஆகியவற்றுக்கு நீட்டிக்கப்படும் என்று கல்வி அமைச்சும் பிஓஎஸ்பி வங்கியும் நேற்று தெரிவித்தன.
இதன் மூலம் கூடுதல் மாணவர்கள் ரொக்கமில்லாக் கட்டணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
'ஸ்மார்ட் படி' திட்டத்தை பிஓஸ்பி வங்கி 2017ஆம் ஆண்டில் தொடங்கியது. இதுவரை ஏறத்தாழ 80 தொடக்கப்பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளும் இத்திட்டத்தைப் பயன்படுத்துகின்றன.
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏறத்தாழ 340 பள்ளிகள் இந்தக் கட்டணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கிட்டத்தட்ட 40,000 மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் ரொக்கமில்லாக் கட்டணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்துகின்றனர்.
'ஸ்மார்ட் படி' கைக்கடிகாரங்கள், 'ஸ்மார்ட் படி' அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி மாணவர்கள் பள்ளி உணவகத்தில் உணவையும் பள்ளியில் உள்ள புத்தகக் கடையில் தங்களுக்குத் தேவையான புத்தகங்கள், எழுதுகோல்கள் போன்றவற்றையும் வாங்கலாம்.
இந்தக் கைக்கடிகாரங்களும் அட்டைகளும் மாணவர்களின் பெற்றோருடைய வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும்.
பிஓஎஸ்பி வங்கி பள்ளிகளில் பொருத்தும் இயந்திரங்களில் இக் கைக்கடிகாரங்கள் அல்லது அட்டைகளை மாணவர்கள் வருடி கட்டணத்தைச் செலுத்தலாம்.
இந்த இயந்திரம் 'இசி லிங்க்' அட்டையையும் ஏற்கும்.
'ஸ்மார்ட் படி' திட்டத்தில் சேர கட்டணம் செலுத்த தேவையில்லை. அடிப்படை பண நிர்வாகத்தை மாணவர்களுக்குக் கற்பிக்க இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
அத்துடன் தங்கள் பிள்ளை
களின் அன்றாடச் செலவுகளைப் பெற்றோர் கண்காணிக்க இது வகை செய்கிறது.
'ஸ்மார்ட் படி' கைக்கடிகாரங்கள், 'ஸ்மார்ட் படி' அட்டைகளைப் பயன்படுத்தி சியர்ஸ், பாப்புயலர், ஃபேர்பிரைஸ், செவன் இலவன் போன்ற கடைகளில் பயன்படுத்தலாம். 'ஸ்மார்ட் படி' கைக்கடிகாரம், அட்டை மூலம் தங்கள் பிள்ளைகள் செய்யும் பரிவர்த்தனைகளைப் பெற்றோர் 'ஸ்மார்ட் படி' கைபேசிச் செயலி மூலம் கண்காணிக்கலாம்.
செலவு வரம்புக்கான ஏற்பாடு
களையும் பெற்றோர் எடுப்பதுடன் தங்கள் பிள்ளைகளுக்கு சேமிப்பு இலக்கையும் அமைக்கலாம்.

