மூன்று வீட்டுப் புதுப்பிப்பு ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக புகார்கள் செய்யப்பட்டதை அடுத்து அவை பற்றி பொதுமக்களுக்கு சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்ஸ் கன்ஸ்ட்ராக்ஷன் வெர்க்ஸ், சென்ஸ் விஷுவல், கே அண்ட் எல் இன்டீரியர் ஆகிய மூன்று நிறுவனங்கள் பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 1லிருந்து இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அவை குறித்து பல புகார்கள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புதுப்பிப்புப் பணிகளுக்கான கட்டணத்தை முழுமையாகவோ அல்லது கட்டணத்தின் ஒரு பகுதியை பெற்றுக்கொண்ட பிறகு அந்த நிறுவனங்கள் பணிகளை தொடர்ந்து தாமதிப்பதாகவும் அல்லது முழுமையாகச் செய்து முடிக்காமல் விட்டுச் செல்வதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊழியர் பற்றாக்குறை, ஊழியர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது என காரணம் காட்டப்படுவதாக வாடிக்கையாளர்கள் கூறினர்.
தங்கள் அனுமதி இல்லாமல் புதுப்பிப்புப் பணித் திட்டத்துக்கான செலவினத்தை இந்த நிறுவனங்கள் உயர்த்தியதாக வாடிக்கையாளர்்கள் சிலர் குறைகூறினர்.
அதுமட்டுமல்லாது, புதுப்பிப்புப் பணிகள் திட்டமிட்டபடி செய்யப்படவில்லை என்றும் பல குறைபாடுகள் இருந்ததாகவும் கூறப்பட்டது.
உதாரணத்துக்கு, மின்சார, சாயம் பூசும் பணிகள் முறையாகச் செய்யப்படவில்லை என்று அறியப்படுகிறது.
முழுமையடையாத புதுப்பிப்புப் பணிகளை முடித்துத் தருமாறு ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக்கொண்டபோது அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் இல்லை என்று வாடிக்கையாளர்கள் கூறினர். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது கூறியது.

