சுகாதாரப் பராமரிப்புப் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் & ஜான்சனின் சிங்கப்பூர்க் கிளையும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியும் இணைந்து, தரவு ஆய்வு, விற்பனை உற்பத்திகள் ஆகியவற்றுக்கான புதிய பயிற்சி நிலையத்தைத் தொடங்கியுள்ளன.
'ஜே&ஜே அனுபவ நிலையம்' நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. மாணவர்கள் உண்மையான வர்த்தக சூழல்களைக்கொண்டு பாடத்திட்ட ஒப்படைப்புகளைச் செய்யவும் அவர்களுக்கு தற்கால துறைசார்ந்த போக்குகளைக் கற்றுத்தரும் பயிலரங்குகளை நடத்தவும் இது வகைசெய்கிறது.
மாணவர்கள் மதியுரைஞர்களிடம் பயிற்சி பெறவும் இந்த நிலையம் கைகொடுக்கும்.
இந்தக் கூட்டு முயற்சி மாணவர்களுக்கு அதிகாரபூர்வமான கற்றல் வாய்ப்புகளைத் தரும் என்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
ஜே&ஜே நிறுவனக் குழுவிடம் இருந்து மாணவர்கள் 'பாப்6' எனும் மேகக் கணிமை அடிப்படையிலான தீர்வுகளைக் கற்றுக்கொள்ள இயலும்.
விற்பனை குறித்த தகவல்களை ஆய்வுசெய்தல், பொருள் பட்டியலை நிர்வகித்தல் உள்ளிட்டவற்றுக்கான ஆக அண்மைத் தொழில்நுட்பங்களில் அதுவும் ஒன்று.
அடுத்த தலைமுறை வர்த்தகத் தலைவர்களைப் பேணி வளர்ப்பது தங்கள் நோக்கம் என்று ஜே&ஜே நிறுவனத் தலைவர் கூறினார்.
புதிய பயிற்சி நிலையத்தை வர்த்தக தொழில் மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை துணையமைச்சர் லோ யென் லிங் அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
இந்தப் புதிய பங்காளித்துவம் சில்லறை விற்பனைத் துறையைக் கைதூக்கிவிட மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
மாணவர்கள் இந்தப் புதிய பயிற்சி நிலையத்தில் அனுபவம் பெறும் அதே நேரத்தில், அவர்கள் உருவாக்கும் சில சிறந்த உத்திகளை ஜே&ஜே சிங்கப்பூர் நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டது.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் கைகோக்கும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்

