வேலைபார்த்த இரண்டு நிறுவனங்களில் இருந்து 71,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததன் தொடர்பில், 53 வயது டே வீ பென் எனும் ஆடவருக்கு நேற்றுப் பத்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கி, விற்கும் நிறுவனங்களில் அவர் வேலைபார்த்தார். 2015க்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையில், ஆல்ஃபா கார்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் $2.80ஐ மட்டும் மீதி வைத்துவிட்டு, கிட்டத்தட்ட 55,000 வெள்ளி பணத்தை எடுத்துக்கொண்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
2018ல் விஎஸ் ஆட்டோஇன்க் நிறுவனத்தில் சேர்ந்த அவர் 16,500 வெள்ளிப் பணத்தை மோசடி செய்ததாகவும், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
நம்பிக்கை மோசடி தொடர்பில் அவர்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இத்தகைய ஒவ்வொரு குற்றத்துக்கும் ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.

