சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 100,000 வெள்ளி பெறுமானமுள்ள மருத்துவப் பொருள்களையும் இதர அத்தியாவசியப் பொருள்களையும் இலங்கைக்கு வழங்க உறுதியளித்துள்ளது.
பொருளியல் நெருக்கடியால் மிகவும் சிரமப்படும் இலங்கைச் சமுதாயத்திற்கு உதவிக்கரம் நீட்டுவது இதன் நோக்கம்.
இதன் தொடர்பில் பொதுமக்கள் நன்கொடை வழங்க ஏதுவாக, சங்கம் பொது நிதித் திரட்டுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. திரட்டப்படும் நிதி மருந்து, மருத்துவக் கருவிகள் வாங்க பயன்படுத்தப்படும்.
இலங்கையின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு மிகவும் சீர்குலைந்ததாகத் தகவல் வெளியானதையடுத்து சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.
உயிர்காக்கும் மருந்துகளுக்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்குப் பற்றாக்குறை நிலவுவதால் இலங்கை மக்கள் மிகவும் சிரமப்படுவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைச் செயலாளர் பெஞ்சமின் வில்லயம் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்ள குடும்பங்களுக்கும், தனிமனிதர்களுக்கும் மிகவும் சிரமமான இந்த நேரத்தில் அத்தியாவசிய நிவாரணப் பொருள்களைக் கொடுத்து உதவ வகைசெய்யும் இந்த நிதித்திரட்டிற்கு மனமுவந்து ஆதரவு வழங்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்வேளையில் நன்கொடை வழங்க விரும்புவோர், சங்கத்தின் பெயருக்குக் காசோலையாகவோ 'பேநவ்' மூலமாகவோ வழங்கலாம் என்று சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் கூறியது. காசோலை வழங்க விரும்புவோர், செஞ்சிலுவைச் சங்கத்தின் பெயரை எழுதி அதனை அஞ்சலில் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.