எதிர்காலத்தில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் சிங்கப்பூரின் மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையம், அதன் நாணயக் கொள்கையை இறுக்கியிருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மூன்றாவது முறையாக ஆணையம், நாணயத்தின் மதிப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.
உள்ளூர் நாணயம், அதன் வர்த்தகப் பங்காளிகளின் நாணயங்களுக்கு எதிராக வலுப்பெறுவதை அனுமதிக்கும் வகையில் நாணய மாற்று விகித கொள்கையின் நடுப்புள்ளி மீண்டும் மையப் படுத்தப்பட்டது. இதனால் நாணயத் தின் மதிப்பு சற்று ஏற்றம் கண்டது.
சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கும் சமயங்களில் ஆணையம் தலையிடுவது வழக்கமான ஒன்று.
ஆனால் ஒரே சமயத்தில் இரட்டை நடவடிக்கைகளை எடுப்பது 2010க்கும் பிறகு இது முதல் முறையாகும்.
நாணயக் கொள்கையை கடுமை யாக்குவதற்கு ஒரே நேரத்தில் இரண்டு விதமான அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு கடந்த அக்டோபரில் நாணயக் கொள்கை கடுமையாக்கப்பட்டது. அதன் பிறகு ஆச்சரியப்படும் வகையில் ஜனவரியில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் அக்டோபர், ஜனவரியைவிட தற்போதைய நடவடிக்கை கடுமையானது என்று ஓசிபிசி வங்கியின் கருவூல ஆய்வு மற்றும் உத்திப் பிரிவின் தலைவரும் தலைமை பொருளியல் நிபுணருமான செலினா லிங் கூறி உள்ளார்.
எம்யுஎஃப்ஜி வங்கியின் நாணய மதிப்பு பகுப்பாய்வாளரான சோஃபியா இங்கும், சிங்கப்பூர் நாணய ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை மிக தீவிரமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆணையம் மேற்கொண்ட இரட்டை நடவடிக்கைகளால் யுஎஸ் டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு உடனடியாக 0.5 விழுக்காடு கூடி 1.355ஐ எட்டியது.
புதன்கிழமைக்குப் பிறகு அதன் மதிப்பு மேலும் 0.7 விழுக்காடு அதிகரித்து நேற்று மதியம் ஒரு மணிவாக்கில் 1.3529 என்ற நிலையில் வலுப்பட்டது.
ஆணையம் அதன் பணவீக்க எதிர்பார்ப்பையும் உயர்த்தியிருக் கிறது.
இவ்வாண்டின் பணவீக்கம் 2.5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக் காட்டுக்கு அதிகரிக்கும் என்று அது கணித்துள்ளது.

