தனியார் கல்விநிலைய பட்டதாரிகள் வேலை நியமனம் பற்றிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆய்வு
சிங்கப்பூரில் தனியார் கல்வி நிலையங்களில் பட்டம் பெற்ற புதிய பட்டதாரிகளில் சுமார் பாதிப்பேருக்குப் படிப்பை முடித்த ஆறே மாதங்களுக்குள் முழுநேர வேலை கிடைத்துள்ளது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் இயக்கம் நடத்திய ஆய்வு மூலம் இது தெரியவந்துள்ளது.
தனியார் கல்வி நிலையங்களைச் சேர்ந்த புதிய பட்டதாரிகளில் 46.4 விழுக்காட்டினருக்கு முழுநேர வேலை கிடைத்தது என்று நேற்று வெளியிடப்பட்ட ஆகப் புதிய 'பட்டதாரிகள் வேலை நியமன ஆய்வு' தெரிவித்தது.
என்றாலும் இந்த அளவு முந்தைய ஆண்டு பட்டதாரிகளின் வேலை நியமன அளவான 49%ஐ விட குறைவு.
மொத்தமாகப் பார்க்கையில், புதிய பட்டதாரிகளில் 85.3% வேலையில் அமர்ந்தனர். அந்த வேலைகளில் பகுதிநேர வேலை, தற்காலிக வேலைகளும் அடங்கும்.
தன்னாட்சி பல்கலைக்கழகப் பட்டதாரிகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் தனியார் கல்வி நிலையங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் கொஞ்சம் குறைவாகவே இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. 2021ல் பட்டம் பெற்ற தன்னாட்சி பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கான ஒட்டுமொத்த வேலை நியமன விகிதம் 94.4% ஆக இருந்தது.
முழுநேர நிரந்தர வேலை நியமன விகிதம் 84% ஆக இருந்தது.
தனியார் கல்வி நிலைய புதிய பட்டதாரிகளுக்கான மொத்த சராசரி மாத சம்பளம், முழுநேர வேலையில் அமர்ந்தவர்களுக்கு $2,989 ஆக இருந்தது. இது தன்னாட்சி பல்கலைக்கழக பட்டதாரிகளைப் பொறுத்தவரை $3,800.
தேசிய சேவைக்குப் பிந்தைய தொழிற்படிப்பு பட்டதாரிகளுக்கான இந்தச் சம்பளம் $2,614 ஆக இருந்தது. இந்த ஆய்வு, முழுநேர இளநிலை புற பட்டக் கல்விச் செயல்திட்டங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 2,900 பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளில் ஒருமித்த கவனம் செலுத்தியது.
இவ்வேளையில், தனியார் கல்வி நிலைய புதிய பட்டதாரிகளில் 27.9 விழுக்காட்டினர், இறுதித்தேர்வு எழுதியதற்குப் பிறகு ஆறு மாதம் கழித்தும் வேலை தேடிய நிலையிலேயே இருந்தார்கள். அல்லது பகுதிநேர, தற்காலிக வேலைகளைப் பார்த்து வந்தார்கள் என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.
இந்த அளவு தன்னாட்சி பல்கலைக்கழகங்கள், தேசிய சேவைக்குப் பிந்தைய தொழிற்படிப்பு பட்டதாரிகள் ஆகியோரின் அளவை விட அதிகமாகும்.

