வாடிக்கையாளர்கள் நம்பி ஒப்படைத்த $479,876 பணத்தை முன்னாள் வழக்கறிஞர் ஒருவர் தவறாகக் கையாண்டார் என்று கூறப்படுகிறது.
குர்டேப் சிங் பாலா சிங், 69, என்ற அந்த வழக்கறிஞர் மீது நம்பிக்கை மோசடி செய்ததாக நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
சிங் வழக்கறிஞராக வேலை பார்த்தபோது 2011ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையில் மூன்று வாடிக்கையாளர்களின் பணத்தை அவர் தவறாகக் கையாண்டு உள்ளதாகக் கூறப்படுகிறது என்று இந்த வழக்கு தொடர்பான அறிக்கை ஒன்றில் காவல்துறை கூறியது.
வாடிக்கையாளர் ஒவ்வொருவரிடம் இருந்தும் $21,000 முதல் $320,000 வரையிலான தொகையை அவர் தவறாகக் கையாண்டு இருக்கிறார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்து 2018ல் நீக்கப்பட்ட பிறகும் திரு டே காய் ஜாய் என்ற வாடிக்கையாளருக்காக 2019ல் சட்ட ஆவணங்களைத் தயார் செய்ததாகவும் சிங் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
'குர்டேப் சிங் சியோங் அண்ட் பார்ட்னர்ஸ்' என்ற நிறுவனத்தில் அவர் வழக்கறிஞராக வேலை பார்த்தார்.
சட்ட ஆலோசனைக்காக வழக்கை ஒத்திவைக்கும்படி நீதி மன்றத்தை சிங் கேட்டுக்கொண்டார். அவர் பின்னொரு தேதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று தெரிவிக்கப்பட்டது.
நம்பிக்கை மோசடி தொடர்பில் குற்றவாளி என்று தீர்ப்பானால் 20 ஆண்டுகள் வரையிலான சிறை, அபராதம் விதிக்க முடியும்.
ஆறு மாதச் சிறை, $25,000 அபராதம் இரண்டும், நீதிமன்ற நடைமுறைக்காக ஆவணங்களைத் தயார்செய்யும் வழக்கறிஞராக செயல்பட்டதற்கான அதிகபட்ச தண்டனையாக அவருக்குக் கிடைக்கலாம்.

