ஆளில்லா வானூர்தி ஒன்றைச் சட்டவிரோதமாக பறக்கவிட்ட ஆடவருக்கு நேற்று $51,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஜேசன் இங் யோக் சென், 43, என்ற அந்த ஆடவர் செய்த இந்தச் செயலால் சிங்கப்பூர் குடியரசு விமானப் படையைச் சேர்ந்த இரண்டு விமானங்களைத் திசை திருப்பிவிட நேர்ந்தது. ஆகாயத்தில் மோதல் ஆபத்து சூழல் காரணமாக 30 நிமிடம் விமான ஓடுபாதையை மூடவேண்டிய நிலையும் அதனால் ஏற்பட்டது.
ராணுவ விமானங்களைத் திருப்பிவிட வேண்டிய நிலையும் ஓடுபாதையை மூடவேண்டிய நிலையும் ஏற்பட்ட முதல் சட்டவிரோத வானூர்திச் சம்பவம் இதுவே என்று விசாரணையில் அரசாங்கத் தரப்பு தெரிவித்தது.
இதனிடையே, வானூர்தியைச் சட்விரோதமாக பறக்கவிட்டதற்காக இந்த அளவுக்கு அதிக அபராதம் இதுவரை யாருக்கும் விதிக்கப்படவில்லை என்பது தெரியவந்து உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
ஜேசன் இங் மூன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். அபராதத்தைச் செலுத்தவில்லை என்றால் அவர் 100 நாள்கள் சிறையில் இருக்க வேண்டும். இந்த வானூர்திச் சம்பவம் 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் கார்ப்பரேஷன் ரோடு பகுதியில் நிகழ்ந்தது.

