புலாவ் புக்கோம் தீவில் உள்ள 'ஷெல் ஈஸ்டர்ன் பெட்ரோலியம்' நிறுவனத்திடம் இருந்து எண்ணெய்யைத் திருட இடம்பெற்ற பெரிய அளவிலான ஒரு சதித்திட்டத்துடன் தொடர்புடைய 12 பேர் மீது நேற்று நீதிமன்றத்தில் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டது.
எண்ணெய் கப்பல்களில் ஏற்றப்படும் எண்ணெய்யின் அளவைப் பரிசோதிப்பதற்காக அந்த 12 பேரையும் நிறுவனத்தின் மதிப்பீட்டு ஆய்வாளர்களாக ஷெல் நிறுவனம் நியமித்து இருந்தது.
எண்ணெய்யை அங்கீகாரம் இல்லாமல் ரகசியமாக ஏற்றிவிடுவதற்குக் கைமாறாக அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவரங்களை ஊழல் ஒழிப்பு புலன்விசாரணை இலாகா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அந்த 12 பேரும் கடந்த 2014ஆம் ஆண்டிற்கும் 2017ஆம் ஆண்டிற்கும் இடையில், ஷெல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களிடம் இருந்து குறைந்தபட்சம் மொத்தம் US$ 213,000 (S$288,000) லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
முகம்மது அலி முகம்மது நூர், 55, என்பவர்தான் ஆக அதிகமாக அதாவது US$90,000 தொகையை லஞ்சமாகப் பெற்று இருக்கிறார், அதில் $39,000 கொடுத்து பிஎம்டபிள்யூ வாகனம் ஒன்றை வாங்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஏ. துரைசாமி, 60, ஜஸ்பிர் சிங் பரம்ஜித் சிங், 37, ஆனந்த் ஓம்பிரகாஷ், 37, நூர்லிமான் பக்டி, 40, எர்வின் சுகார்டி ஜமாலுதின், 38, லீ பீன் லியான், 57, நுஷாத் கரிம் தெங்குர், 45, முகம்மது கைருல் அஸ்ரி முகம்மது ஹனாஃபியா, 38, குமரன் ரத்ன குமரன், 40, பரமானந்தம் ஸ்ரீநிவாசன், 39, ரிஷால் ஸுல்கிஃப்லி, 38 ஆகியோர் குற்றம் சுமத்தப்பட்ட இதர 11 பேர்.
இந்தச் சதித்திட்டம் தொடர்பில் ஷெல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ஜுவாண்டி புங்காட் என்பவருக்கு சென்ற மார்ச் 31ஆம் தேதி 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
முசாஃபர் அலி கான் முகம்மது அக்ரம், ரிச்சர்ட் கோ சீ கியோங் ஆகிய இதர இரண்டு முன்னாள் ஊழியர்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தச் சதித்திட்டம் தொடர்பில் குறைந்தபட்சம் 26 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை மூன்று பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவர்களில் இருவருக்குத் தண்டனை கிடைத்துள்ளது.

