புனித வெள்ளிக்கிழமையான நேற்றைய தினம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே உள்ள தரைவழி எல்லைகள் திறக்கப்பட்ட பிறகு வந்த முதல் பொது விடுமுறை நாள். இந்நாளுடன் வார இறுதி நாள்களும் சேர்ந்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து மலேசியா செல்ல உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகே மக்கள் பலர் நீண்ட வரிசையில் திரண்டனர். நேற்று காலை சுமார் எட்டு மணிக்கு 200க்கும் அதிகமானோர் வரிசையில் நின்றதாக இப்பகுதிக்கு நேரில் சென்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
இங்குள்ள நடைபாதையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் மக்களை வரிசையில் நிற்கச் செய்ய குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகளும் காவல்துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஒழுங்காக வரிசையில் நிற்குமாறும் ஒருவரை ஒருவர் தள்ளவேண்டாம் என்றும் அதிகாரிகள் மக்களிடம் வலியுறுத்தினர்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தையும் தாண்டிய வரிசையின் நீளம் 100 மீட்டருக்கும் அதிகமாக இருந்தது.
எனினும், வரிசை தொடர்ந்து நகர்ந்துகொண்டிருந்ததாக அங்கிருந்த சிலர் தெரிவித்தனர். நேற்று காலை ஒன்பது மணியளவில் மழை பெய்தது. ஆனால் இங்கு திரண்டவர்கள் மழையைப் பொருட்படுத்தவில்லை.
காலை சுமார் 10 மணிக்கு மலேசியாவுக்குச் சொந்தமான ஜோகூர் கடற்பாலப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட பல வாகனங்கள் அங்கு காணப்பட்டன.
மதியம் 12 மணியளவில் மழை நின்றவுடன் போக்குவரத்து சற்று சீரானது. மழை பெய்தபோதும் புனித வெள்ளிக்கிழமையன்று மலேசியாவுக்குச் செல்வதில் உற்சாகமடைந்ததாகப் பலர் தெரிவித்தனர்.
தனது உறவினர்களுடன் ேஜாகூர் செல்ல பல காலமாகத் திட்டமிட்டதாக ஈராண்டாடுகளில் முதன்முறையாக மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்ட 54 வயது திருவாட்டி நிஷா ஹனீஃப் கூறினார்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகே இவ்வளவு நீளமான வரிசை உருவாகும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று சிங்கப்பூரரான 29 வயது ஜேன் டே சொன்னார். எனினும், வரிசை வேகமாக நகர்ந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் ஒன்றாம் தேதியன்று சிங்கப்பூர்-மலேசிய தரைவழி எல்லைகள் மீண்டும் முழுமையாகத் திறக்கப்பட்டன.
அதற்குப் பிறகு 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் தரைவழி எல்லைகளைக் கடந்துள்ளதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.
எல்லைக் கட்டுப்பாட்டுத் தளர்வுக்குப் பிறகு வந்த முதல் பொது விடுமுறை நாள்

