சிங்கப்பூரில் மின்சார வாகனங்கள் (மின்சார கார்கள்) விற்பனையில் 'டெஸ்லா' நிறுவனம் முன்னணி வகிக்கிறது. புதிய அனுகூலங்கள் அறிவிக்கப்பட்டதையொட்டி மின்கலன்களில் இயங்கும் வாகனங்களை வாங்குவதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் 636 மின்சார வாகனங்களை வாங்க மக்கள் பதிவுசெய்தனர். இந்த எண்ணிக்கை, விற்பனையான மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 8.1 விழுக்காடு. சென்ற ஆண்டு இந்த விகிதம் 3.8 விழுக்காடாக இருந்தது.
பெரும்பாலான இதர நிறுவனங்களின் மின்சார வாகன விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
மின்வாகனத் துறையில் 'டெஸ்லா'விற்கு அடுத்த நிலையில் இருக்கும் 'பிவைடி' நிறுவனம் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 96 வாகனங்களை விற்றது.
ஒரு மாதத்திற்கு சராசரியாக 32 வாகனங்களை 'பிவைடி' விற்றது. சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை ஏழாக இருந்தது.
எனினும், 'பிவைடி'யின் பெரும்பாலான மின்சார வாகனங்களை வாடகை வாகன நிறுவனங்கள் உள்ளிட்டவைதான் வாங்கின.
மின்சார வாகனத் துறையில் முன்னணி வகிக்கும் முதல் இரு நிறுவனங்களுக்கு நடுவே உள்ள இடைவெளி 88 விழுக்காட்டுக்குக் குறைந்தது. சென்ற ஆண்டு இந்த விகிதம் 600 விழுக்காட்டுக்கும் மேல் அதிகமாகப் பதிவானது. 'பிஎம்டபிள்யூ', 'போர்ஷே' ஆகிய நிறுவனங்களும் மின்சார வாகனங்களை விற்கின்றன.

