செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2c8d25db-14cf-4bd4-9c3b-67cd0ad3d6f3
-

அமைச்சர் ஓங்கிற்கு டெங்கி

சுகாதார அமைச்சர் ஓங் யீ காங்குக்கு டெங்கி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு ஓங் நேற்று இதைத் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை தமக்கு தசை வலி ஏற்பட்டதாகவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ததால் அது வந்திருக்கக்கூடும் என்று நினைத்ததாகவும் அவர் கூறினார். தசை வலி தொடர்ந்தபோது, பல முறை 'ஏஆர்டி' பரிசோதனையை மேற்கொண்டதாகவும் அவற்றின் மூலம் தமக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியானதாகவும் திரு ஓங் கூறினார்.

வியாழக்கிழமையன்று அவரின் உடல் எங்கும் தடிப்புகள் தோன்றின. அதைத் தொடர்ந்து அவர் ரத்தப் பரிசோதனையைச் செய்துகொண்டபோது டெங்கி காய்ச்சல் ஏற்பட்டது உறுதியானது.

தமது உடல்நிலை தேறி வருகிறது என்று மருத்துவர் கூறியதாகத் தெரிவித்த திரு ஓங், தாம் நிறைய தண்ணீர் பருகவேண்டும் என்றும் குறிப்பிட்டார். டெங்கி பரவும் சூழலில் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளும்படி அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

பொதுவாக ஜூன் மாதம் டெங்கி பரவல் உச்சத்தை எட்டும். இவ்வாண்டு அதற்கு முன்னரே வாராந்திர டெங்கி சம்பவங்கள் வெகுவாக உயர்ந்து வருவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் முன்னதாக ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது.

இலங்கைக்கு உதவ சிங்கப்பூர்

செஞ்சிலுவைச் சங்கத்திற்கு $100,000

இலங்கையில் நிலவிவரும் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினருக்கு உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டு வரும் நிதி திரட்டும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் சிங்கப்பூர் அரசாங்கம் 100,000 வெள்ளி நிதியுதவியை அதற்கு வழங்கவுள்ளது. இலங்கை மக்களின் அவசர தேவைகளுக்காக மருத்துவப் பொருள்களையும் இதர அத்தியாவசியப் பொருள்களையும் வழங்க 100,000 வெள்ளியை ஒதுக்கப்போவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருந்தது.

இலங்கை எதிர்நோக்கிவரும் பொருளியல், மனிதாபிமான நெருக்கடிகளால் அந்நாட்டில் பெரிய அளவில் வளப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

'செயற்கை நுண்ணறிவு தீர்வுகளுக்கு தகவல் பகிர்வுத் தளம் தேவை'

பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பலதரப்பட்ட தரமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் சூழலை சிங்கப்பூர் உருவாக்கவேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார். அது, செயற்கை நுண்ணறிவில் கூடுதலான புத்தாக்க முயற்சிகளை சிங்கப்பூர் செயல்படுத்த வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

முதன்முறையாக நடைபெற்ற 'வோர்ல்ட் ஏஐ கான் ஃபெஸ்டிவல்' எனும் பிரான்சின் கான் நகரில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு விழாவில் திருவாட்டி டியோ மெய்நிகரில் பேசினார்.

தகவல்களைப் பாதுகாத்தவாறு பல்வேறு தரப்பினர் அவற்றைப் பகிர்ந்துகொள்ள உதவும் கட்டமைப்புகளையும் தளங்களையும் உருவாக்கும் முயற்சிகளில் சிங்கப்பூர் முதலீடு செய்து வருவதாக அறிவார்ந்த தேசம், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி டியோ சொன்னார்.