சிங்கப்பூர் முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துவர்கள் பலர் புனித வெள்ளிக்கிழமையான நேற்று வழிபாட்டுக்காகத் திரண்டனர். கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் சென்ற மாதம் தளர்த்தப்பட்டதால் கூடுதலானோர் சமய வழிபாட்டுச் சேவைகளில் நேரில் சென்று பங்கேற்கமுடியும்.
உட்லண்ட்சில் இருக்கும் 'செயின்ட் ஆண்டனி ஆஃப் படுவா' தேவாலயத்தில் நேற்று காலை ஒன்பது மணிக்கு நடைபெற்ற புனித வெள்ளிக்கிழமை வழிபாட்டில் 351 பேர் பங்கேற்றதாக அங்கு சென்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. அந்த தேவாலயத்தில் ஒரு நேரத்தில் 400 பேர் வரை இருக்கலாம்.
சென்ற மாதம் 29ஆம் தேதியிலிருந்து 1,000க்கும் அதிகமானோர் ஈடுபடக்கூடிய சமய நடவடிக்கைகளில் 75 விழுக்காட்டினர் வரை பங்கேற்கலாம். முன்னதாக இந்த விகிதம் 50 விழுக்காடாக இருந்தது.
மேலும், நேரில் சென்று சமய நடவடிக்கைகளில் பங்கேற்போர் முகக்கவசங்களை அணிந்தபடி பாடவும் கூட்டுப் பிரார்த்தனைகளை வாய்விட்டுச் சொல்லவும் அனுமதி உண்டு.
இத்தகைய காரணங்களால் இவ்வாண்டின் புனித வெள்ளிக்கிழமை கூடுதல் சிறப்பானதாக அமைந்துள்ளதென தேவாலயங்களுக்குச் சென்ற சிலர் கூறினர். தேவாலங்களில் பாடமுடிவது மிகுந்த மனநிறைவை அளிப்பதாக வழிபாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் தமது தேவாலாயத்தில் கூடும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக நொவீனா தேவாலயத்தின் திருச்சபை பாதிரியார் யூஜீன் லீ சொன்னார். கட்டுப்பாட்டுத் தளர்வுக்குப் பிறகு வந்த முதல் ஞாயிற்றுகிழமையன்று சுமார் 500 வழிபாட்டாளர்கள் வருகை தந்ததாகவும் மறுவாரம் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பானதாகவும் அவர் தெரிவித்தார்.
இனி தேவாலயங்களில் இடம்பெறும் வழிபாட்டு நடவடிக்கைகளில் நேரில் வந்து பங்கேற்க ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப் போவதாக சிங்கப்பூர் தேசிய தேவாலயங்கள் மன்றம் தெரிவித்தது.
புனித வெள்ளிக்கிழமையான நேற்று
உட்லண்ட்சில்
உள்ள 'செயின்ட் ஆண்டனி ஆஃப் படுவா'
தேவாலயத்தில் வழிபாட்டுக்காகத் திரண்ட
கத்தோலிக்கர்கள்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

