பீச் ரோட்டில் உள்ள சோங் ஹுவா ஸ்டீம்போட் உணவகத்துக்கு அருகே ஆடவர் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொலைசெய்ய முயன்றபோது உணவக ஊழியர்கள் உடனடியாகச் செயலில் இறங்கி அவரைத் தடுக்க முயன்றனர்.
உதவி கேட்டு அலறிய பெண்ணின் குரலைக் கேட்டு வெளியே வந்தபோது இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை ஆடவர் தொடர்ந்து வெட்டுக்கத்தியால் தாக்கிய காட்சி திகிலூட்டியதாக அவர்கள் கூறினர்.
பிளாஸ்டிக் நாற்காலிகள், உலோக அறிவிப்புப் பலகைகள் எனக் கையில் கிடைத்தவற்றைத் தூக்கி ஆடவர்மேல் வீசியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
குப்பைத் தொட்டிகளை எடுத்து வீசியதாகக் கூறினார் 30 வயது திரு ஜேக்கி டீ. தொடர்ந்து தாக்கிய ஆடவரைப் பார்த்து பயந்தாலும் தான் ஏதாவது செய்யாவிட்டால் அந்தப் பெண் உயிரிழக்க நேரிடும் என்று புரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"எங்கள் கண் முன்னே அந்தப் பெண்ணின் உயிருக்கு ஆபத்து எனும்போது வெறுமனே பார்த்துக்கொண்டு நிற்க என்னால் இயலவில்லை," என்றார் திரு டீ.
திரு டீயையும் அந்த ஆடவர் தாக்க வந்ததாகவும் நல்லவேளையாக சோங் ஹுவா ஸ்டீம்போட் உணவகத்தின் ஊழியர் ஒருவர், நாற்காலிகளையும் உலோகப் பலகைகளையும்கொண்டு ஆடவரைத் தடுத்ததாகவும் கூறப்பட்டது.
திரு டீ பணிபுரியும் சமுராய் பிபிகியூ உணவக முதலாளி திரு லியோனார்ட் ஷி, உலோக அறிவிப்புப் பலகையைக் கொண்டு தாக்குதல்காரரைத் தடுத்தார்.
"நாற்பதுக்கும் அதிகாமானோர் திரண்டபோதும் ஆடவரிடம் வெட்டுக்கத்தி இருந்ததால் அவர்கள் அஞ்சினர்; சுமார் பத்து பேர் மட்டுமே துணிந்து அவரைத் தடுக்க முயன்றனர்," என்று திரு ஷி கூறினார்.
சம்பவம் தொடர்பில் இணையத்தில் பதிவிடப்பட்ட காணொளியில் தாக்குதல்காரர் தன்னைத் தடுத்து நிறுத்த முயன்றோரை நோக்கிக் வெட்டுக்கத்தியை வீசி மிரட்டுவது பதிவாகியுள்ளது.
பிளாஸ்டிக் நாற்காலிகளை தாக்குதல்காரர்மேல் வீசிய திரு வேய் சென் சியாங், தான் கண்ட காட்சியை எந்நாளும் மறக்கவே முடியாது என்றார்.
உணவக ஊழியர்கள் அந்த ஆடவரை, குறுகலான சந்து ஒன்றில் துரத்திச் சென்றனர். பின்னர் காவல்துறை அதிகாரிகள் 'டேசர்' எனப்படும் உடலை செயலிழக்கச் செய்யும் கருவியைக் கொண்டு ஆடவரை முடக்கினர்.
நேற்று முன்தினம் மாலை ஐந்தரை மணியளவில் நடந்த சம்பவத்தில் 46 வயது ஆடவர் தனது மணிக்கட்டையும் காயப்படுத்திக்கொண்டதாகக் கூறப்பட்டது. 41 வயதாகும் அவரது மனைவிக்குப் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
இருவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆடவருக்கு ஆயுதமேந்திய அதிகாரிகள் காவல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆடவர் தற்போது மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும் சீனாவைச் சேர்ந்த இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருப்பதாகவும் அவர்களை அறிந்தவர்கள் கூறினர். சம்பவத்தைக் கொலை முயற்சி என்று காவல்துறை வகைப்படுத்தியுள்ளது. இன்று ஆடவர்மேல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
பீச் ரோடு தாக்குதலின்போது துணிச்சலுடன் செயல்பட்ட உணவக ஊழியர்கள்

