லண்டனை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கி, சிங்கப்பூரில் அதன் அலுவலக இடத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூரில் அண்மை ஆண்டுகளில் வங்கி ஒன்று மேற்கொள்ளும் ஆகப் பெரிய அலுவலக இடக் குறைப்பாக இது அமையும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கி, மரினா பே நிதி நிலையத்தின் முதல் கட்டடத்தில் இயங்கிவருகிறது. தற்போது பயன்படுத்தும் ஒன்பது தளங்களின் குத்தகையை அது கைவிடும் என்று பெயர் வெளியிட விரும்பாத சிலர் குறிப்பிட்டனர்.
முன்னதாக வங்கி நான்கு தளங்கள்வரை அதன் அலுவலக இடத்தைக் குறைத்துக்கொள்ளும் என்று புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
அலுவலக இடம் குறைக்கப்படுவதால், வங்கி ஊழியர்களுக்கு தனிப்பட்ட அலுவலக மேசைகள் இனி இருக்கமாட்டா.
அலுவலகத்துக்கு வருமுன்னர் அவர்கள் தங்கள் மேசைகளுக்கு முன்பதிவு செய்யும் நடைமுறை நடப்புக்கு வரக்கூடும்.
சிங்கப்பூரில் வங்கியின் 80% ஊழியர்கள் நீக்குப்போக்கான வேலைமுறையைப் பின்பற்றுவதால் அலுவலகச் சூழலை மாற்றியமைக்கத் திட்டமிடுவதாகக் கூறிய ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கியின் பேச்சாளர், சிங்கப்பூர் தொடர்ந்து வங்கியின் முக்கியச் சந்தைகளில் ஒன்றாகக் கருதப்படுவதாகக் குறிப்பிட்டார்.

