சிங்கப்பூர் காவல்துறை மார்ச் 29 முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மேற்கொண்ட நடவடிக்கையில், 8.9 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் 381 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
16 வயதுக்கும் 84 வயதுக்கும் இடைப்பட்ட இவர்களில் 254 பேர் ஆடவர்கள்; 127 பேர் பெண்கள்.
990க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இணையக் காதல் மோசடி, மின்வர்த்தக மோசடி, சீன அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளைப் போன்று நடித்து ஏமாற்றுதல், முதலீடு, வேலைவாய்ப்பு, கடன் ஆகியவை தொடர்பான மோசடிகள் இவற்றில் அடங்கும்.
ஏமாற்றுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், உரிமம் இன்றி கட்டணச் சேவை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 381 பேரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
ஏமாற்றுச் செயல் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.
பணமோசடிக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ $500,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
உரிமம் இன்றி சேவை வழங்கிய குற்றத்துக்கு அதிகபட்சம் $125,000 அபராதமோ மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
மோசடிக் குற்றங்களைக் கடுமையாகக் கருதுவதாகக் காவல்துறை குறிப்பிட்டது. மோசடிச் செயல்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் காவல்துறையின் 24 மணி நேரத் தொலைபேசி எண்ணான 1800-255-0000ஐ அழைத்து தகவல்தரும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் இணையத்தளம் மூலமாகவும் விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.

