கடல்நீரை குடிநீராக்கும் சிங்கப்பூரின் ஐந்தாவது ஆலை ஜூரோங் தீவில் இன்று திறக்கப்பட்டது. அதிநவீன தண்ணீர் தொழில் நுட்பங்களுடன் கூடிய அந்த ஆலை, நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் காலன் அதாவது, 137,000 கன மீட்டர் குடிநீரை உருவாக்கித் தரும். சிங்கப்பூருக்கு அன்றாடம் 430 மில்லியன் காலன் குடிநீர் தேவைப்படுகிறது. இதில் 7 விழுக்காட்டுக்குப் புதிய ஆலை பொறுப்பு வகிக்கும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்து உள்ளது.
தண்ணீர் தேவை 2060ஆம் ஆண்டு வாக்கில் இரண்டு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தேவையில் 85 விழுக்காட்டை நியூவாட்டர், கடல்நீரை குடிநீராக்குவது ஆகிய வழிகள் மூலம் பெறுவது தனது திட்டம் என்று கழகம் தெரிவித்தது.
சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் வார தொடக்கத்தையொட்டி துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இன்று புதிய ஆலையை அதிகாரபூர்வ முறையில் திறந்துவைத்தார்.
புதிய ஆலை, கடல்நீரை பெறுவது, கழிவுநீரை வெளியேற்றுவது, மின்சாரப் பயனீடு ஆகியவற்றில் அந்த வளாகத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவதால் ஏற்படக்கூடிய வருடாந்திர எரிசக்தி மிச்சம் கணிசமானது. அது கிட்டத்தட்ட 1,000 வீவககுடும்பங்களுக்குத் தேவைப்படும் எரிசக்தி அளவுக்குச் சமம் என்று கழகம் கூறியது.
புதிய ஆலையை துவாஸ் பவர் நிறுவனமும் எஸ்டி இன்ஜினியரிங்நிறுவனமும் சேர்ந்த ஒரு கூட்டு நிறுவனம் 25 ஆண்டு காலத்திற்கு நிர்வகித்து நடத்தும்.

