உயரும் கடல்நீர் மட்டத்திலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்க தெக்கோங் தீவில் 'போல்டர்' தடுப்புகளை எழுப்பும் பணிகள் பாதிக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார். தமது ஃபேஸ்புக் பதிவில் அவர் நேற்று இதைக் குறிப்பிட்டார்.
தடுப்புகளுக்கான பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை எழுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திரு லீ கூறினார்.
சிங்கப்பூரில் முதன்முறையாக இத்தகைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 'போல்டர்' தடுப்புகளுக்கான நிலம் தெக்கோங்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக திரு லீ சொன்னார். அந்த நிலத்தை வலுப்படுத்த அப்பகுதியில் மணலை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சென்ற வாரம் நேரில் சென்று பார்வையிட்ட அவர் குறிப்பிட்டார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், தேசிய வளர்ச்சி அமைச்சு ஆகிய இரண்டும் 2016ஆம் ஆண்டில் இத்திட்டம் குறித்து அறிவித்தன. இதர சில திட்டங்களைப்போல் இதற்கும் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் இடையூறுகளை விளைவித்ததாகக் கூறிய அமைச்சர் லீ, 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் தடுப்புகள் முழுமையாக எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
"2019ஆம் ஆண்டு தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லீ சியன் லூங் கூறியதைப்போல் தெக்கோங்கில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம், 'போல்டர்' தடுப்புகளை எழுப்புவதில் நமக்கு அனுபவத்தை வழங்கும். அது, கடற்கரைகளைப் பாதுகாக்கவும் கடல் நீர்மட்டம் உயர்வதற்கு எதிராக மீள்திறனை வளர்க்கவும் உதவலாம்," என்று திரு லீ கூறினார். இதில் அனுபவம் வாய்ந்த நெதர்லாந்துடன் சிங்கப்பூர் இணைந்து செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

