கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதன் தொடர்பில் இரண்டு அம்சங்கள் கருத்தில்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
முதலாவதாக, மருத்துவமனைகளில் எத்தனை நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளமுடியும், கிருமித்தொற்றுக்கு ஆளான எத்தனை பேர் மோசமாக நோய்வாய்ப்படுகின்றனர் ஆகியவை கண்காணிக்கப்படும். அடுத்தபடியாக புதிதாக உருவெடுக்கக்கூடிய கொவிட்-19 கிருமி வகை போன்ற அடுத்த கிருமிப் பரவல் அலையை ஏற்படுத்தும் சாத்தியத்தை அதிகரிக்கும் அம்சங்கள் ஆராயப்படும் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
"கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளையில் இந்த இரு அம்சங்களில் போதுமான கவனம் செலுத்தவேண்டும்," என்று கொவிட்-19 சூழலைக் கையாளும் அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் தலைவர்களில் ஒருவரான திரு ஓங் சொன்னார். சிங்கப்பூர் பெரிய அளவில் கட்டுப்பாடுகளைப் தளர்த்தியபோதும் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைந்து வந்துள்ளதை அவர் சுட்டினார்.
அதிகபட்சமாக எத்தனை பேர் ஒன்றுகூடலாம், முகக்கவசம் அணிவது, வேலையிடங்களுக்கான விதிமுறைகள், பாதுகாப்பு இடைவெளி, நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் எத்தனை விழுக்காட்டுப் பகுதிகளை நிரப்பலாம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என்று திரு ஓங் கூறினார். எதிலும் அகல கால் வைக்காமல் பாதுகாப்பான முறையில் நடவடிக்கைகளை எடுப்பதே சிங்கப்பூருக்கு உதவியிருக்கும் அணுகுமுறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் செம்பவாங்ல் நோன்புப் பெருநாளையொட்டி குடியிருப்பாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ஓங் பேசினார்.

