சித்திரைப் புத்தாண்டை வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடிய விற்பனை நிர்வாகியான 69 வயது வசந்தகுமாரி வீராசாமிக்கு நேற்றுக் காலை ஆலயத்தில் சமைக்கப்பட்ட உணவுப் பொட்டலம் கிடைத்தது. ஆலயத்திற்கு செல்ல இயலாதபோதும் அங்கிருந்து தம்மைத் தேடி வந்த உணவைக் கண்டு முகம் மலர்ந்தார் இவர்.
பிறவியிலிருந்தே வாய் பேச, காது கேட்க முடியாத சகோதரியை, கணவருடனும் மகளுடனும் பராமரிக்கும் திருமதி வசந்தகுமாரி, "இதுபோன்ற உணவு விநியோகம் என்னைப்போல வெளியே செல்லச் சிரமப்படுவோருக்கு உதவியாக இருக்கும்," என்றார்.
திருமதி வசந்தகுமாரியின் குடும்பம் உள்ளிட்ட பல குடும்பங்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியம் 2,500 உணவுப் பொட்டலங்களை வழங்கியது.
நேற்றுக் காலை ஆலயத்தின் சமையற்காரர்கள் உணவைச் சமைத்ததும், அறக்கட்டளை வாரியத்தின் தொண்டூழியர்கள் ஒன்றுசேர்ந்து உணவைப் பொட்டலமிட்டனர். மக்கள் கழக நற்பணிப் பேரவைத் தொண்டூழியர்கள், தேவைப்படும் குடும்பங்களிடம் உணவைக் கொண்டு சேர்த்தனர்.
வசதி குறைந்தோருக்கு உணவு விநியோகம் செய்யும் இந்த முயற்சியை 2020ஆம் ஆண்டில் தொடங்கியதாக இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவைக் குழுவின் தலைவர் சுசிலா கணேசன் தெரிவித்தார்.
கொவிட்-19 தொடர்பிலான முடக்கநிலையின்போது பாதிக்கப்பட்டோருக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
"மாதந்தோறும் சராசரியாக 2,000 முதல் 2,500 குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறோம். சித்திரைப் புத்தாண்டு என்பதால் இம்முறை இனிப்பு வகைகளைக் கொண்ட சுமார் 1,000 பொட்டலங்களையும் கூடுதலாக வழங்கினோம்," என்று அவர் கூறினார்.
14 ஆண்டுகளாக ஆலய அன்னதான நிகழ்ச்சிகளுக்குத் தொண்டாற்றும் 53 வயது திறன் பயிற்றுவிப்பாளரான சுமித்ரி பழனியப்பன், வசதி குறைந்தோருக்கு ஆலயம் வழி சேவை செய்வதில் மனநிறைவு காண்பதாகச் சொன்னார். தொண்டூழியர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செவ்வனே செய்வதுடன் பிற தொண்டூழயர்களுக்கு அன்புடன் வழிகாட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கி. ஜனார்த்தனன்

