மலேசியாவின் ஜோகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதன்முறையாக சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும் அவர், பிரதமர் லீ சியன் லூங்கையும் ஆறு சிங்கப்பூர் அமைச்சர்களையும் சந்திப்பார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பை ஏற்று 43 வயது திரு ஹஃபிஸ் இங்கு வருகை தந்துள்ளார்.
ஜோகூர் மாநில முதலமைச்சருடன் அம்மாநில அரசாங்கத்தின் அதிகாரிகளும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.
பிரதமர் லீ சியன் லூங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, வெளியுறவு ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சருமான மாலிக்கி ஒஸ்மான், வர்த்தக, தொழில் துணை அமைச்சரும் கலாசார, சமூக, இளையர் துறை துணை அமைச்சருமான எல்வின் டான் ஆகியோரை திரு ஹஃபிஸ் சந்திப்பார் என்று வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முதல் வரும் வியாழக்கிழமை வரை மரீனா பே சேண்ட்சில் நடைபெறும் 'வாட்டர் லீடர்ஸ் சமிட்' எனும் தண்ணீர் தொடர்பிலான மாநாட்டிலும் சென்ற மாதம் 15ஆம் தேதியன்று பதவியேற்ற திரு ஹஃபிஸ் கலந்துகொள்வார்.

