சாங்கி விமான நிலையத்தில் சென்ற வாரம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பிருந்ததில் 31 விழுக்காட்டுப் பயணிகள் சென்ற வாரம் வந்துசென்றதாகக் கூறப்பட்டது.
ஒப்புநோக்க ஒரு மாதத்திற்கு முன்பு அது 18 விழுக்காடாகப் பதிவானது.
சிங்கப்பூர் இம்மாதம் 1ஆம் தேதி கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு எல்லைகளை முழுதும் திறந்த பிறகு விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்த ஆண்டு இறுதிக்குள் கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு முன்பு பதிவான விமானப் பயணங்களின் எண்ணிக்கையில் பாதியை எட்டுவது சிங்கப்பூரின் இலக்கு.
அண்மையில் அதிகரிக்கும் விமானப் போக்குவரத்து சிங்கப்பூரின் இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கையைத் தருவதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த வாரத்தில் 400,000 விமானப் பயணிகள் சிங்கப்பூர் வழியே சென்றதாக ஆணையம் குறிப்பிட்டது.
ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் அதிகமானோர் பயணம் செய்ததாக ஆணையம் கூறியது.
சென்ற வாரம் சிங்கப்பூருக்கு வந்துசென்ற விமானச் சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருமிப் பரவலுக்கு முன்பிருந்த அளவில் அது 38 விழுக்காடு என்று ஆணையம் தெரிவித்தது. சென்ற மாதம் அது 29 விழுக்காடாக இருந்தது.
இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே அதிகமான விமானச் சேவைகள் இயங்குவதாக ஆணையம் தெரிவித்தது.
அடுத்த மாதம் மே தினம், நோன்புப் பெருநாள் ஆகியவற்றை ஒட்டி நீண்ட வார இறுதி விடுமுறை வருகிறது. அதன் பின்னர் பள்ளி விடுமுறையும் தொடங்குகிறது.
இத்தகைய விடுமுறைக் காலங்களில் விமானப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையத்தின் தலைமை இயக்குநர் ஹான் கோக் ஜுவான் கூறினார்.
பயண நாளன்று முன்கூட்டியே விமான நிலையத்துக்கு வந்துவிடும்படி பயணிகளை அவர் கேட்டுக்கொண்டார். இவ்வாறு செய்வதால், பயணம் தொடர்பான விமான நிலைய நடைமுறைகளுக்குப் போதிய நேரம் கிடைக்கும் என்பதை அவர் நினைவூட்டினார்.
சென்ற ஆண்டு முழுவதும் சாங்கி விமான நிலையத்தின் வழியாகப் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியன். இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 1.42 மில்லியன் பயணிகள் சாங்கிக்கு வந்துசென்றதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் நோக்கில் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் அண்மையில் அறிவித்துள்ள திட்டங்களும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கைகொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

