2025ஆம் ஆண்டின் முற்பாதிக்குள் வட்டார குளிரூட்டும் கட்டைமைப்பைக் கொண்ட சிங்கப்பூரின் முதல் நகர மையம் என்ற சிறப்பைப் பெறவிருக்கிறது தெம்பனிஸ் நகர மையம்.
குளிரூட்டும் தொழில்நுட்பத்தால் சுற்றுப்புறத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க இத்தகைய கட்டமைப்பு உதவுகிறது. வட்டாரத்தில் அமைந்திருக்கும் 80%க்கும் அதிகமான கட்டடங்கள் இந்த முறையைப் பின்பற்ற இது வகைசெய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பி குழுமம் முதல்முறையாக அமைக்கவிருக்கும் வட்டார குளிரூட்டும் கட்டமைப்புக்கான பணிகளைத் தொடங்க ஏழு கட்டடங்களின் உரிமையாளர்கள் இணங்கியுள்ளனர்.
செஞ்சுரி ஸ்குவேர், சிபிஎஃப் தெம்பனிஸ் கட்டடம், இன்கம் அட் தெம்பனிஸ் ஜங்ஷன், ஓசிபிசி தெம்பனிஸ் சென்டர் 2, அவர் தெம்பனிஸ் ஹப், தெம்பனிஸ் கடைத்தொகுதி, தெம்பனிஸ் 1 ஆகியவை அந்தக் கட்டடங்கள்.
விரைவில் மேலும் ஒரு கட்டட உரிமையாளர் இணையவிருப்பதாக எஸ்பி குழுமமும் தெமாசெக் நிறுவனமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டார குளிரூட்டும் தொழில்நுட்பத்தின்கீழ் தண்ணீர் பொதுவான இடத்தில் குளிரூட்டப்படும். பின்னர் நிலத்தடிக் குழாய்கள் மூலம் வெவ்வேறு கட்டடங்களுக்கு அனுப்பப்படும்.
பாரம்பரியமான குளிரூட்டும் முறையில் ஒவ்வொரு கட்டடத்திலும் அதற்கான தண்ணீர் குளிரூட்டும் இடம் அமைக்கப்பட்டிருக்கும்.
வட்டார குளிரூட்டும் கட்டமைப்பால் கணிசமான அளவில் எரிசக்தியைச் சேமிக்க முடியும் என்பதோடு கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் இயலும்.
தெம்பனிஸில் அமையவிருக்கும் இந்தப் புதிய கட்டமைப்பு ஆண்டுக்கு 1,359 டன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது 1,236 கார்களைச் சாலையில் இருந்து அகற்றுவதற்குச் சமம்.
வட்டார குளிரூட்டும் கட்டமைப்பு ஆண்டுக்கு 2,800,000 கிலோவாட் மின்சாரத்தைச் சேமிக்கவும் வகைசெய்யும். 900க்கும் அதிகமான மூவறை வீவக வீடுகள் ஓர் ஆண்டில் பயன்படுத்தக்கூடிய அளவு மின்சாரம் இது.
இந்தப் புதிய வட்டார குளிரூட்டும் கட்டமைப்பை உருவாக்க 40 முதல் 60 மில்லியன் வெள்ளி வரை செலவாகுமென மதிப்பிடப்பட்டு உள்ளது.

