சிங்கப்பூரின் சென்ற மாத எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி 7.7% அதிகரித்தது. ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவு.
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதி வளர்ச்சி முறையே 17.6%ஆகவும் 9.4%ஆகவும் பதிவானது. இருப்பினும் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் அது அதிகம் என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு நேற்று வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக புளூம்பெர்க் நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட நிபுணர்கள் மார்ச்சில் சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி சராசரியாக 1.7 விழுக்காடாக இருக்கும் என்று கருத்துரைத்து இருந் தனர்.
ஆண்டு அடிப்படையில், மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி சென்ற மாதம் 11.5% உயர்ந்தது. மின்னணுசாராப் பொருள்களின் ஏற்றுமதி 6.8% ஆக இருந்தது. பிப்ரவரி மாதத்துடன் ஒப்புநோக்க இரண்டுமே குறைவு.
சென்ற மாதம் சிங்கப்பூர் 17.2 பில்லியன் வெள்ளி மதிப்புமிக்க எண்ணெய் சாராப் பொருள்களை ஏற்றுமதி செய்தது. விநியோகத் தடை போன்ற சவால்களால் அடுத்த சில மாதங்களுக்கு வர்த்தகம் பாதிக்கப்படக்கூடுமென ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

