தேர்வில் ஏமாற்றிய பயிற்சி வழக்கறிஞர்கள் ஆறு பேர் மீது நடவடிக்கை

தேர்வில் ஏமாற்றிய பயிற்சி வழக்கறிஞர்கள் ஆறு பேர் மீது நடவடிக்கை

2 mins read
9e27f5e6-0733-4fa6-b6ea-afee17bdea2e
-

2020ஆம் ஆண்­டுக்­கான வழக்­க­றி­ஞர் பயிற்­சித் தேர்­வு­களில் ஆறு பேர் ஏமாற்­றி­யது கண்­ட­றி­யப்­பட்­டதை அடுத்து வழக்­க­றி­ஞர் தொழி­லில் ஈடு­பட அவர்­கள் செய்­தி­ருந்த விண்­ணப்­பங்­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன. தொழில் நெறி­மு­றை­கள், தொழில்­முறை பொறுப்பு ஆகிய பாடங்­க­ளுக்­கான தேர்­வும் அதில் அடங்­கும்.

இரண்­டா­வது வாய்ப்பு தரும் நோக்­கில் பயிற்சி வழக்­க­றி­ஞர்­களான அந்த ஆறு பேரின் பெயர்­களை வெளி­யிட வேண்­டாம் என்று உயர் நீதி­மன்ற நீதி­பதி சூ ஹான் டெக் ஆலோ­சனை கூறி­னார். நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் அவர்­கள் மீது தவ­றான எண்­ணம் பதி­யா­மல் இருக்க இது உத­வும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

"வழக்­க­றி­ஞர் தொழி­லில் ஒவ்­வொ­ரு­வ­ரும் சீச­ரின் மனை­வி­யைப் போல சந்­தே­கத்­துக்கு அப்­பாற்­பட்­ட­வர்­க­ளாய் இருக்க வேண்­டி­யது அவ­சி­யம். இப்­ப­டிப்­பட்ட பணி­யில் நேர்மை தவ­று­தல் என்­பது மிகப் பெரிய பிரச்­சினை," என்­றார் அவர். அதே­வே­ளை­யில் ஒரு­வ­ரின் தொழில்­மு­றைப் பணி தொடங்­கும் முன்பே முற்­றுப்­புள்ளி இடு­வ­தும் கடு­மை­யா­னது என்­றார் நீதி­பதி சூ.

புகழ்­பெற்ற பெரிய சட்ட நிறு­வ­னங்­களில் பயிற்சி பெற்ற அந்த ஆறு பேரில் ஐவர் தேர்வு வினாக்­களுக்­கான பதில்­களை வாட்ஸ்­அப்­பில் பகிர்ந்­து­கொண்­டது கண்­ட­றி­யப்­பட்­ட­தால் மீண்­டும் தேர்வு எழுத அவர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. வழக்­க­றி­ஞ­ரா­கப் பயிற்சி செய்ய அவர்­கள் அனுப்­பிய விண்­ணப்­பங்­கள் ஆறு மாதங்­களுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

மூன்று தேர்­வு­களில் ஏமாற்­றிய மற்­றொ­ரு­வ­ருக்கு முழுப் பாடத்­தை­யும் மீண்­டும் படிக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. அவ­ரது விண்­ணப்­ப­மும் ஓராண்­டுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

ஆறு பேருமே தேர்­வு­களில் தேர்ச்சி பெற்­றி­ருந்­தா­லும் அவர்­களது விண்­ணப்­பங்­கள் இவ்­வாறு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

தலை­மைச் சட்ட அதி­காரி, சிங்­கப்­பூர் சட்­டக் கல்வி நிலை­யம், வழக்கறிஞர்கள் சங்கம் என முத்­த­ரப்­பின் ஒப்­பு­த­லைப் பெற்ற பிறகே விண்­ணப்­ப­தா­ரர்­கள் சிங்­கப்­பூ­ரில் வழக்­கறி­ஞ­ரா­கப் பணி­யாற்ற அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

இம்­மா­தம் 13ஆம் தேதி ஏமாற்­றிய இந்த அறு­வர் உள்­ளிட்ட 26 விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்­கான நேர்­கா­ணல் இடம்­பெற்­றது. தேர்­வில் ஏமாற்­றிய ஆறு பயிற்சி வழக்­க­றி­ஞர்­க­ளின் விண்­ணப்­பங்­களை தலை­மைச் சட்ட அதி­காரி நிரா­க­ரித்­தார்.

முழுப் பாடத்­தை­யும் மீண்­டும் படிக்க உத்­த­ர­வி­டப்­பட்ட விண்­ணப்­ப­தா­ரர் ஒருவர், தாம் தவறு ஏதும் செய்­ய­வில்லை என்று கூறி­னார். தாமும் மற்­றொ­ரு­வ­ரும் சேர்ந்து படித்­த­தால் இரு­வ­ரின் பதில்­களும் ஒரே மாதிரி இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

மற்ற ஐவ­ரும் சட்­டக் கல்வி நிலை­யத்­தின் விசா­ர­ணை­யில் தொடக்­கத்­தி­லேயே தங்­கள் தவற்றை ஒப்­புக்­கொண்­ட­னர்.