கூசு தீவின் மலைமீது நேற்று முன்தினம் மாலை பற்றி எரிந்த தீயில் அங்கு இருந்த கிராமாட் நினைவிடம் என்றழைக்கப்படும் மூன்று மலாய் வழிபாட்டுக்கூடங்கள் கடு மையாகச் சேதமடைந்தன.
தீச்சம்பவத்தை அங்கு பணியில் இருந்த துப்புரவாளர் ஒருவர் முதன்முதலாகக் கண்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
மாலை 6.20 மணியளவில் பற்றி எரிந்ததை அவர் கண்டாகக் கூறப்
படுகிறது. தீப்பற்றியதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சேதமடைந்த வழிபாட்டுக்கூடங்கள் மீண்டும் கட்டி எழுப்பப்படும் என்று அதன் பராமரிப்பாளரான திரு இஷாக் சம்சுதின், 60, தெரிவித்தார்.
தீச்சம்பவம் குறித்து தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும் வழிபாட்டுக் கூடங்கள் அழிந்ததை நம்பக் கடினமாக இருந்தது என்றும் அவர் கூறினார். வழிபாட்டின் போது பயன்படுத்தப்படும் ஊதுவத்தி களால் தீப்பிடித்திருக்க வாய்ப்பு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கூசு தீவில் மூன்றாண்டுகளாக துப்புரவு வேலை செய்து வரும் ஹரிஹரன், 26, என்பவர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளரிடம் பேசினார்.
மாலை நேரத்தில் கருகிய வாடையை தாம் உணர்ந்ததாகவும் அதனைத் தொடர்ந்து வழிபாட்டுக்கூடங்களை நோக்கி ஓடியபோது அவை தீப்பற்றி எரிந்துகொண்டதாகவும் அவர் கூறினார். பின்னர் இதுபற்றி காவல்துறையிடமும் திரு இஷாக்கிடமும் தெரிவித்ததாகவும் ஹரிஹரன் சொன்னார்.
இரவு நேரம் நெருங்கிய அந்த வேளையில் விரைந்து வந்த சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கடுமையாக பெய்த மழை அவர்களின் முயற்சிக்கு ஒத்துழைத்தது. தீயணைப்பு முயற்சிக்கு கடல்நீரைப் பயன்படுத்த சுமார் 20 தண்ணீர்க் குழாய்களை அவர்கள் பயன்படுத்தினர்.
அந்தக் குழாய் ஒவ்வொன்றும் 30 மீட்டர் நீளமுள்ளதாக இருந்ததென ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
அதன் செய்தியாளர் நேற்றுக் காலை அங்கு சென்று பார்த்தபோது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் இரு படகுகள் தீவின் படகுத்துறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்.
பிற்பகல் 12.30 மணியளவில் விசாரணை அதிகாரிகள் 152 படி
களைக் கொண்ட மலைமீது ஏறி வழிபாட்டுக் கூடங்களுக்குச் சென்றனர். தீப்பிடித்த பகுதி சுற்றி மறைக்கப்பட்டு இருந்தது.
தீப்பிடித்த வேளையில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் கூறப் படுகிறது.

