கடல்நீர்மட்ட உயர்வைச் சமாளிக்க சிங்கப்பூர் ஒரு கட்டத்தில் ஆளில்லா வானூர்தியையும் (டுரோன்) கண்காணிப்புக் கருவி
களையும் பயன்படுத்த வேண்டி வரலாம் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
கடல்நீர்மட்ட பிரச்சினையைச் சமாளிக்க சிங்கப்பூர் எடுத்து வரும் முயற்சிகளில் இவையும் அடங்கும் என்றார் அவர். இதுதொடர்பாக பொதுப் பயனீட்டுக் கழகம் யோசனைகளுக்கு அழைப்பு விடுக்கும் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரின் அனைத்துலக தண்ணீர் வாரம் மற்றும் 'கிளீன்என்வைரோ' என்னும் இருவித சுற்றுச்சூழல் மாநாடுகளை தொடங்கி வைத்து அவர் உரை நிகழ்த்தினார்.
சிங்கப்பூரின் கடலோரத்திலும் உட்புறத்திலும் நிகழக்கூடிய வெள்ளம் தொடர்பான தரவுகள் மீது பகுப்பாய்வு நடத்தி விவரங்களைச் சேகரிப்பது, விண்வெளிப் படங்கள் மற்றும் ரேடார் கண்காணிப்பு போன்ற வளர்ந்துவரும் உணர்
கருவித் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியன தொடர்பாக கழகம் யோசனைகளை வரவேற்கும் என்று அப்போது அவர் கூறினார்.
"இந்த யோசனைகள் வலுவான கடலோரப் பாதுகாப்பு உத்திகளை வகுப்பதில் கழகத்திற்கு உதவும்," என்றும் திருவாட்டி ஃபூ குறிப்பிட்டார்.
அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு இணங்க பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. மூன்று அம்சங்களில் யோசனைகளை வரவேற்பதாக அதில் அது தெரிவித்தது.
முதலாவது, குறைந்த பராமரிப்பு ரேடார் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளியை அடிப்படை யாகக் கொண்ட, இணையத்தின் துணையுடன் உடனுக்குடன் தரவு களை வழங்கக்கூடிய உணர்கருவிகள் ஆகியன தொடர்பானது. சிங்கப்பூரின் கடலோரப் பகுதிகளில் கடல்நீரின் உயர்வு வேறுபடுவதைக் காட்ட இவற்றின் தரவுகள் உதவும். நீண்டகால அடிப்படையில் நிகழும் மாற்றங் களைக் கண்காணிக்கவும் கழகத் திற்கு இவை பயன்படும் என்று கழகத்தின் கடலோரப் பாதுகாப்புத் துறை துணை இயக்கு நர் ஹோ சாய் டெக், ஸ்ட்ெரய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறி னார்.
கடற்கரை அருகே கடல்நீர் மட்டம் உயர்வதால் கப்பல்கள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைக் கண்காணிப்பது இரண்டாவது அம்சம். கடலோரத்தை கப்பல் நெருங்கும்போது ஆழமற்ற நீரில் எழும் அலைகள் கடல்நீர்மட்ட உயர்வின் தாக்கத்தை மோசமாக் கக்கூடும்.
கடலோரத்திலும் நாட்டின் உட் புறத்திலும் ஏற்படும் வெள்ளத்தின் ஆழத்தையும் அளவையும் கண் காணிக்க ஆளில்லா வானூர்தி, கண்காணிப்புக் கருவி, குடிமக்கள் வழங்கும் விவேகக் கைபேசி படங்கள் ஆகியவற்றைப் பயன் படுத்துவதற்கான சாத்தியம் தொடர் பானது மூன்றாவது அம்சம் என்று கழகம் கூறியது.

