இரவுநேர பொழுதுபோக்குக் கூடங்கள் இன்றுமுதல் திறப்பு
இரவுநேர பொழுதுபோக்குக் கூடங்கள் இன்று செவ்வாய்க் கிழமைமுதல் திறக்க அனுமதிக்கப்பட்டாலும் சில பொழுது போக்குக் கூடங்களிடம் அதிக ஆர்வம் காணப்படவில்லை. இது தொடர்பாக சில இரவுநேர பொழுதுபோக்குக் கூட நடத்துநர்கள் சிலருடன் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளர் பேசினார். இன்று திறக்க அனுமதிக்கப்பட்டாலும் சில பொழுதுபோக்குக் கூடங்கள் நாளை புதன்கிழமை திறப் பதாகக் கூறின. சில கூடங்கள் இப்போதைக்கு நடனத்தை நிறுத்திவைத்து வர்த்தகத்தை மீண்டும் தொடங்க உள்ளன.
இரவுநேர மதுபானக் கூடம், இசைக் கூடம், கரவோக்கே நிலையம், டிஸ்கோ நடனக் கூடம் போன்ற வற்றிற்கு கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் தொடருகின்றன. பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை அவை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, தடுப்பூசி போட்டுக் கொண்டோர் அடிப்படையிலான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம். ஆடல், பாடலுடன் கூடிய உள்ளரங்க நிகழ்வுகளைக் காணச் செல்வோர் முகக்கவசம் அணிவதும் கட்டாயம். சாப்பிடும்போதும் பானம் அருந்தும்போதும் மட்டுமே அவர்கள் முகக் கவசத்தை அகற்ற வேண்டும். அவற்றைச் செய்து முடித்த உடன் மீண்டும் முகக்கவசத்தை அணிந்துகொள்ள வேண்டும். கொவிட்-19 கிருமித்தொற்று பரவல் மிகுந்திருந்த வேளையில் இரவுநேர பொழுதுபோக்குக் கூடங்கள் பல உணவு, பானங்களை விற்கும் கடைகளாக மாறி செயல்பட்டன.
$62,000 போலி ஆடைகள்
கிளமெண்டியில் உள்ள தெருச்சந்தையிலும் அங் மோ கியோ ஸ்திரீட் 51ல் உள்ள வீடு ஒன்றிலும் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் $62,000 மதிப்புள்ள போலி வணிகமுத்திரை கொண்ட ஆடைகள் பறிமுதல் செய்யப் பட்டன. இதில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 42 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது. போலி முத்திரை பதிக்கப்பட்ட 2,400 ஆடைகள் கைப்பற்றப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் $100,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

