சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 736 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஏப்ரல் 10லிருந்து 16 வரை இடைப்பட்ட வாரத்தில் இந்த எண்ணிக்கை பதிவானது. 2020ஆம் ஆண்டு ஆக அதிக எண்ணிக்கையில் 937 சம்பவங்கள் பதிவாகின.
சிங்கப்பூரில் டெங்கி நிலவரம் மோசமடைந்து வருவதாகவும், இவ்வாண்டுக்குள் பெரியளவில் டெங்கி தொற்றுப் பாதிப்பு ஏற்படும் என்றும் தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரித்துள்ளது.
வழக்கமாக ஜூன் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை டெங்கி தொற்று அதிகமானோரைப் பாதிக்கும். ஆனால் இம்முறை வழக்கத்துக்கு மாறாக தொற்றுச் சம்பவங்கள் முன்கூட்டியே அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக வாரியம் தெரிவித்தது.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 4,700க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 18 நிலவரப்படி, டெங்கி அபாயமுடைய 159 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெங்கி தொற்று வேகமாக பரவுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வெப்பமும், மழையும் கலந்த வானிலை ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவான சூழலாக அமைகிறது. பலரும் வீட்டிலே இருந்து வேலைபார்ப்பதால் கொசுக்கள் அவர்களைக் கடிப்பது எளிமையாகிறது. புதிய வகை டெங்கி கிருமி அதிகளவில் பரவி வருவது மூன்றாவது காரணம் என வாரியம் சுட்டியது.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும், டெங்கி ஒழிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும் என்றும் வாரியம் நினைவூட்டியது.


