கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பணிக்குழு
ஜோகூர் கடற்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குத் தீர்வுகளை வரைய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள ஜோகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார். குறிப்பாக வார இறுதி நாள்களில் நிலைமையைச் சீராக்குவது குறிக்கோள் என்று அவர் கூறினார்.
2026ஆம் ஆண்டு சிங்கப்பூர்-ஜோகூர் விரைவு ரயில் திட்டம் நிறைவடையும்வரை போக்குவரத்தைச் சரிசெய்ய இந்த முயற்சி எடுக்கப்படுவதாக திரு ஹஃபிஸ் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுடன் உட்லண்ட்சில் கட்டப்பட்டு வரும் விரைவு ரயில் முனையத்தின் கட்டுமானத் தளத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிறகு திரு ஹஃபிஸ் இதைத் தெரிவித்தார்.
பீச் ரோடு தாக்குதல்: மாதின் உடல்நிலை மேம்பட்டு வருகிறது
பீச் ரோட்டில் உணவகம் ஒன்றுக்கு வெளியே சென்ற வாரம் வெட்டுக்கத்தியைக் கொண்டு கணவர் என நம்பப்படும் ஆடவரால் தாக்கப்பட்ட மாது இன்னும் டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாதின் உடல்நிலை மேம்பட்டுள்ளதாக அவருக்குத் தெரிந்தவர்கள் சிலர் கூறியுள்ளனர்.
அவரின் உடல்நிலையை உணவக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். சோங் சிங் (ஒரிஜின்) ஸ்டீம்போட் உணவகத்தில் பணிபுரிந்து வந்த அந்த 41 வயது மாதை மருத்துவமனைக்குச் சென்று தாம் பார்த்து வந்ததாக அந்த உணவக உரிமையாளர் தெரிவித்தார். மாது இன்னும் சுயநினைவின்றி இருப்பதாகவும் அவருக்கு மேலும் சில அறுவை சிகிச்சைகள் தேவைப்படும் என்றும் அவருக்குத் தெரிந்த உணவக ஊழியர்கள் சிலர் கூறினர்.
குடும்ப வன்முறை சட்டங்களில்
மாற்றங்கள் குறித்து மக்கள் கருத்து
குடும்ப வன்முறைச் செயல்களை மேற்கொள்வோர், அவற்றுக்கு ஆளாவோர் ஆகிய இரு தரப்பும் தங்களுக்கிடையே பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வகைசெய்ய அவர்களின் அடையாளம் வெளியிடப்படாமல் இருக்கலாம். குடும்ப வன்முறை சட்டங்களில் பரிந்துரைக்கப்பட்ட இத்தகைய மாற்றங்கள் குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பொதுமக்களின் கருத்துகளைச் சேகரிக்க முயற்சி எடுக்கிறது.
reach.gov.sg எனும் இணையத்தளத்தில் இம்மாதம் 30ஆம் தேதிவரை பொதுமக்களிடம் கருத்துகள் சேகரிக்கப்படும். இந்நடவடிக்கை இம்மாதம் ஆறாம் தேதியன்று தொடங்கியது.

