கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல், சிங்கப்பூரையும் நியூசிலாந்தையும் மேலும் நெருக்கமாக்கியதாக பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டனும் தாமும் அடிக்கடி தொடர்புகொண்டதா திரு லீ தெரிவித்தார்.
மேலும், கிருமி தொடர்பான தகவல்களை இருநாட்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் அடிக்கடி பகிர்ந்துகொள்வதாகவும் அவர் சொன்னார்.
திருவாட்டி ஆர்டன் சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு விருந்து வழங்கியபோது திரு லீ பேசினார்.
கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கியபோது பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அப்போது தங்களின் குடிமக்களை அழைத்துவர இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று உதவியதை திரு லீ குறிப்பிட்டார்.
எல்லைகள் மூடப்பட்ட பிறகு விநியோகச் சங்கிலிகளில் இடையூறுகள் ஏற்பட்டன. அப்போது சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையே உணவு, மருத்துவப் பொருள்களை அனுப்ப இரு நாடுகளும் சரக்கு விமானச் சேவை ஒப்பந்தத்தைச் செய்துகொண்டதையும் அவர் சுட்டினார்.
"இன்னும் சொல்லப்போனால் ஒப்பந்தத்தின்கீழ் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூரிலிருந்து நியூசிலாந்துக்குச் சென்ற முதல் விமானத்தில் ஒன்பது நியூசிலாந்து குடிமக்கள் நாடு திரும்பினர், அவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்," என்று திரு லீ தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு மே மாதம் மியன்மாரிலிருந்து தங்கள் குடிமக்களை அழைத்துவரவும் சிங்கப்பூரும் நியூசிலாந்தும் இணைந்து ஒரு விமானச் சேவையை இயக்கின.
பல ஆண்டுகளாக சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையே இருந்துவரும் நட்பையும் நம்பிக்கையையும் அடித்தளமாகக் கொண்டே வலுவான இருதரப்பு உறவு அமைந்துள்ளதாகப் பிரதமர் லீ சொன்னார்.

